Friday, September 25

ராஜ புத்திரன்_ விமர்சனம்

Loading

ராஜ புத்திரன்_ விமர்சனம்

கிராமத்து மக்கள் அனைவரும் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கும் பிரபு, தனது மகன் வெற்றியை உயிருக்குயிராக நேசித்து வளர்த்து வருகிறார்.

மழை பொய்த்ததால் ஊரில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆயினும் தன் மகன் வெற்றியை வேறு எங்கும் வேலைக்கு அனுப்ப பிரபு விரும்பவில்லை.

இந்த சூழலில் தான் காதலிக்கும் கிருஷ்ண பிரியாவை மணந்து கொள்கிறார் வெற்றி.

வெளிநாடுகளில் வேலை செய்து தாய் நாட்டில் உள்ள தங்கள் வீட்டுக்கு பலரும் அனுப்பும் பணத்தை சட்ட விரோதமாக அவர்களது வீடுகளில் சேர்க்கும் தொழிலை கோமல் குமாரும் அவரது அடியாட்களும் செய்து வருகின்றனர். வெற்றி இவர்களிடம் வேலைக்கு சேர்கிறார்.

ஒரு நாள் பணத்தை குறிப்பிட்டவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க செல்லும்போது அந்தப் பணம் திருட்டு போகிறது.

வெற்றியுடன் பணி புரியும் வேறு சிலரும் பணத்தை டெலிவரி செய்ய போகும்போது திருட்டு போகிறது.

பணம் இவ்வாறு திருட்டு போவதற்கு காரணம் யார் என்பதை வெற்றி கண்டுபிடிக்கிறார்.

இதனால் வெற்றியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

கண்போல் போற்றி வளர்க்கும் மகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் பிரபு சும்மா இருப்பாரா? அவரும் களத்தில் இறங்குகிறார்.

இறுதியில் வெற்றி பெற்றது யார்?

சட்ட விரோதமாக பணத்தை மாற்றும் சமூக விரோத கும்பலா அல்லது வெற்றியா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மகா கந்தன்.

மொத்த படத்தையும் தாங்கி நிற்பது பிரபுதான்.

மகன் மீது அளவு கடந்த பாசத்தை காட்டும்போது உணர்ச்சிகரமான நடிப்பில் முத்திரை பதிக்கும் பிரபு,   ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெற்றிக்கு ஜோடியாக வரும் கிருஷ்ண பிரியா காதல் காட்சிகளில் சோபிக்கிறார்.

ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறது.
நவபல் ராஜாவின் இசை சுமார் ரகம் தான்.

லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, தங்கதுரை ஆகியோரும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

தந்தை மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் ஆக்சன் காதல் நகைச்சுவை என்று அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த முழுமையான பொழுதுபோக்கு சித்திரமாக மலர்ந்திருக்கிறது ராஜபுத்திரன்.