Monday, October 19

ரெபல் _  விமர்சனம்:

Loading

ரெபல் _  விமர்சனம்:

அரசியல் காரணங்களால் கேரளவுக்குள் முடங்கிப்போன தமிழர்  படும் அவஸ்த்தைகளைச் சொல்லும் திரைப்படம்.
தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் கவனத்தை ஈர்த்து வரும் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் நிகேஷ் உருவாக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார்.

மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகை மமிதா பைஜூ, சுப்ரணிய சிவா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

80-களில் கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படியாக வைத்து படத்தை உருவாக்கி உள்ளனர். மூணாறு பகுதியில் வாழும் தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள். வறுமையில் உழலும் அவர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகள் படித்து முன்னேறட்டும் என, பாலக்காடு கல்லூரியில் சேர்க்கின்றனர்.
அங்கு பெரும்பான்மையாக படிக்கும் மலையாள மாணவர்கள், தமிழ் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைப் படுத்துகின்றனர்.

தமிழ் மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும், தமிழ் மாணவி ஒருவர் தரக்குறைவாக நடத்தப்பட்ட சம்பவமும் ஏற்கெனவே நடந்து இருக்கின்றன.

இந்த பின்னணியில், தமிழ் மாணவர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர். மாணவர் சங்க தேர்தலில் நிற்கவும் களத்தில் இறங்குகின்றனர்.
இதையடுத்து மற்ற இரண்டு அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள்,  தமிழ் மாணவர்கள் மீது மீண்டும் கடும் தாக்குதலை நடத்துகின்றனர்.

இறுதியில் தமிழ் மாணவர்களுக்கு உரிமை கிடைத்ததா என்பதே மீதிக் கதை.

புரட்சிகரமான கதாநாயகனாக தோன்றுகிறார் ஜி.வி. பிரகாஷ். எப்போதும் முகத்தில் “நாம் என்ன அடிமையா” என்கிற கேள்வி… அதன் இறுக்கம்.. “தமிழனா பிறந்தது தப்பா” என்று ஆதங்கத்துடன் கேட்பது… என அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

நாயகி, மமிதா பைஜூ. அழகான+ அளவான நடிப்பு.

ஆதித்யா பாஸ்கர், சுப்ரமணிய சிவா, கருணாஸ்..  என மொத்தத்தில் அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன.
“இங்க நீலக் கொடி, சிவப்புக் கொடின்னு நிறங்கள்ல பிரச்னை இல்லை. அது யார் கையில இருக்குதுங்கறதுதான் பிரச்னை” -இது போல் பல வசனங்கள்.

அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக மூணாறு பகுதி தேயிலைத் தோட்டங்கள், இரவு நேரத்தில் மாணவர் விடுதி காட்சிகள்.. மிகச் சிறப்பு.

ஜி.வி.பிரகாஷ், சித்து குமார், ஆஃப்ரோ இசையில்
‘அழகான சதிகாரி’ ,’சக்கர முத்தே’ உள்ளிட்ட அனைத்து பாடல்களும் லயிக்க வைக்கின்றன.

மாணவர் விடுதி, பிரசார ஓவியங்கள் எனக் கலை இயக்குநர் பாப்பாநாடு சி.உதயகுமார் கவனத்தை ஈர்க்கிறார்.

முதல் படத்திலேயே தைரியமாக அரசியலை வைத்து.. அதுவும் சிந்தக்க வைக்கும் அரசியலை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கி உள்ள நிகேஷ் பாராட்டுக்கு உரியவர்.
மொத்தத்தில் பார்க்க மட்டுமல்ல.. உணர வேண்டிய படம்.

மதிப்பெண் 3.5/5