![]()
‘சட்டென்று மாறுது வானிலை’ _ விமர்சனம்:
கவித்துவமான தலைப்பில் வெறும் காதல் கதையாய் மட்டும் சுருங்காமல், அதிரடியும் மர்மமும் ததும்பும் ஒரு பரபரப்பான காதல்- சென்ட்டிமெண்ட் – த்ரில்லராக இப்படம் மலர்ந்துள்ளது.
கதையின் நாயகன் சந்துரு, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் துடிப்பான ஓர் அனாதை இளைஞன். அமைச்சரின் மகளான ஜானகி, தன் தந்தையின் போக்கில் விருப்பமில்லாமல் விடுதியில் தங்கி வாழ்பவள். எதிர்பாராத ஓர் தருணத்தில் சந்தித்துக் கொள்ளும் இவ்விருவருக்கும் இடையே காதல் தீ பற்றுகிறது.
யாருக்கும் தெரியாமல் சட்டென்று மணமுடித்துக் கொள்கிறார்கள்.
திருமணத்துக்குப் பிறகு நாயகனுக்கு வேலை பறிபோகிறது. இதனால் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள். அதை சமாளிக்கவும் சற்று ஆடம்பரமாக வாழவும் வட்டிக்குகடன் வாங்குகிறார்கள்.
இந்த நிலையில் தேனிலவு கொண்டாடக் கொடைக்கானல் மலைக்குச் செல்கிறார்கள். அங்கே கதை, காதல் – பேமிலி சென்ட்டிமெண்ட் மோடில் இருந்து மாறி, க்ரைம் சப்ஜெக்ட்டுக்கு மாறுகிறது.
ஓட்டல் அறையில் தங்கும் தம்பதியரின் அந்தரங்கங்களை படம் பிடித்து விற்கும் கொடூர வில்லனிடம் சிக்குகிறார்கள். . இதற்கிடையே, சொத்தைக் குறிவைத்து இவர்களைப் பிரிக்கத் துடிக்கும் ஜானகியின் பழைய பாய் பிரண்டும் வருகிறான். மகளைத் தேடி கண்டுபிடித்து கொலை செய்ய அலைகிறார் அமைச்சர்.
இந்த நிலையில் திடீரென ஜானகி காணாமல் போக, அவளைக் கொன்றதாகச் சந்துருவின் மீது பழி விழுந்து சிறைவாசம் அனுபவிக்க நேர்கிறது.
இந்தச் சூழ்ச்சி வலையிலிருந்து சந்துரு எவ்வாறு மீண்டான், காதலியைக் கண்டுபிடித்தானா என்பதை விறுவிறுப்பான இறுதித் திருப்பங்களுடன் விவரிக்கிறது பின்பகுதி கதை.
நாயகன் ஜெய் தனக்கே உரிய எதார்த்த நடிப்பில் மிளிர்கிறார். முதல் பாதியில் தளபதி விஜய்யின் பாணியில் உடல் மொழி, நடனம், அதிரடி எனப் புதிய பரிமாணத்தில் தோன்றி ரசிகர்களை கவர முயற்சிக்கிறார்.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜன், கொள்ளை அழகு.. கூடுதலாக நன்றாக நடிக்கவும் செய்கிறார்.
காமெடியன் யோகி பாபு இந்தப் படத்தில் காமெடியுடன் வில்லனாகவும் முயற்சி செய்திருகிறார். இரண்டுமே சரிவரவில்லை..
சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைக் கச்சிதமாகச் செய்து சிரிக்க வைக்கின்றனர்.
மிரட்டல் வில்லனாக வரும் ராமச்சந்திரா ராஜு லைட்டாக மிரட்டுகிறார்.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு, கொடைக்கானலின் இயற்கை அழகையும் த்ரில்லர் காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின்இசையில் உருவான பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக மகாகவி பாரதியாரின் “வீழ்வேன் என் நினைத்தாயோ…” பாடலை ரேப் இசை பாணியில் கொடுத்திருப்பது பிரமாதம்.
டார்லிங் ரிச்சர்ட்சனின் கச்சிதமான படத்தொகுப்பு, கதையின் ஓட்டத்திற்குப் பெரும் வேகத்தைக் கூட்டியுள்ளது.
காதல், சஸ்பென்ஸ், சென்டிமெண்ட் என அனைத்தையம் சரிவிகத்தில் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாபு விஜய்.
நம்மைச் சுற்றி நடக்கும் ஓர் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணியை சொல்லி, அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும், சிறப்பான த்ரில்லர் படம். ரசிக்கலாம்.


