Friday, October 2

சீதா ராமம் – விமர்சனம்

Loading

 

சீதா ராமம் – விமர்சனம்

பாகிஸ்தானில் படிக்கும் கல்லூரி மாணவி ராஷ்மிகாவின் தாத்தா, இந்தியாவில் உள்ள ஒருவரிடம் கடிதமொன்றை சேர்ப்பிக்கும் பொறுப்பை தன் பேத்தியிடம் ஒப்படைத்து, அதை செய்தால் மட்டுமே தன் சொத்து கிடைக்கும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

ஏற்கெனவே சரியான முகவரியின்றி இரண்டு முறை திரும்பி வந்த அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ராஷ்மிகா இந்தியா வருகிறார். இந்தக் கடிதம் யாருக்கு யாரால் எழுதப்பட்ட கடிதம் என்பதெல்லாம் சுவையான காட்சிகள் மூலம் பிளாஷ் பேக்காக விரிகிறது

ராணுவ வீரர் துல்கர் சல்மான் தனக்கு உறவு என்று யாருமில்லை என்பதை ஒரு வானொலி பேட்டியில் யதேச்சையாகச் சொல்ல, அதைக் கேட்ட பலரும் உறவென தாங்கள் இருப்பதாகச் சொல்லி கடிதங்களை எழுதிக் குவிக்கின்றனர். அதில் ஒரு கடிதம் துல்கரை தன் கணவர் என்று விளித்து அவரை திக்கு முக்காட வைக்கிறது.

யார் இந்த மனைவி என்று துல்கர் சல்மான் அவரைத் தேடிச் செல்வதும் அதைத் தொடர்ந்து ஏற்படும் திருப்பங்களும்தான் சீதாராமம்.

இரண்டாம் பகுதியில் வரும் எதிர்பாரா திருப்பங்கள் படத்தை மேலும்  விறுவிறுப்பாக கொண்டு செல்ல வெகுவாக துணை நிற்கின்றன.

ராணுவ வீரராக கம்பீரம் காட்டுவதிலாகட்டும், காதலியை கை பிடிக்க
ஏங்குவதாகட்டும் துல்கர் சல்மான் முத்திரை பதிக்கும் வகையில்
நடித்திருக்கிறார்.நாயகி மிருணாள் தாக்கூருக்கும் துல்கருக்குமான
கெமிஸ்ட்ரி பிரமாதமாக அமைந்திருக்கிறது.

ராஷ்மிகா ஏற்றிருப்பது சிறிய வேடம்போல் தோன்றினாலும் வலுவாக அமைக்கப்பட்ட
கதாபாத்திரம். ஆரம்பத்தில் சற்றும் ஈடுபாடில்லாமல் தாத்தா சொன்னதற்காக
கடிதத்தை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டா வெறுப்பாக புறப்படும் ராஷ்மிகா
போகப்போக அவருக்கே ஈடுபாடு வந்து கடிதத்துக்குரிய நபரைத் தேட ஆரம்பிப்பதை
சிறப்பாக செய்திருக்கிறார்.

பனி படர்ந்த மலைகளும், பனி மழையையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்று சொல்லத்தக்க வகையில் ஒளிப்பதிவாளர்கள் பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இருவரும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். மட்டுமின்றி அரண்மனைக்காட்சிகளும், இராணுவக் காட்சிகளும் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் மிக்பெரிய பலம் மதன் கார்கியின் வசனங்கள்தான். வசனங்கள் பல இடங்களில் ஹைக்கூ கவிதையாக நெஞ்சில் நிறைகிறது.

நல்லதொரு காதல் கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் திரையில் வடித்து காதல் காவியமாக படைத்திருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவபுடி. போயம் இன் செலுலாய்ட்.

Poem in celluloid

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் சீதா ராமம்

மதிப்பெண் 4 /5