Monday, December 2

குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன்!

Loading

 
குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செண்டர் ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவா சார் படம் எப்போ ரிலீஸ் பண்ணாலும் ஹிட் அடிக்கும், இது உச்சக்கட்ட கோடையில் வெளியாகிறது, இந்த கோடையில் இந்த படம் ஆட்சி செய்யும் என்றார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்.
 
ராஜேஷ் முதல் படத்திலிருந்து நான் அவருடன் இணைந்து எல்லா படத்திலும் பணியாற்றி வருகிறேன். ஹிப் ஹாப் ஆதியிடம் பேசும்போது பல்லவி, சரணம் எல்லாம் எனக்கு தெரியாதுனு சொல்வார், ஆனால் பாடல்கள் எல்லாம் செம்மயா இருக்கும். சிவகார்த்திகேயன நடிச்ச எல்லா படங்களிலுமே நான் ரெண்டு, மூணு பாடல்கள் பண்ணிருவேன். 2011ல சிவாவ நான் எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கார், மாறாமல் அப்படியே இருக்கிறார் என்றார் நடன இயக்குனர் தினேஷ்.
 
என் பெயர் லக்‌ஷ்மி நாராயணன். ஆனால் ஓகே ஓகேவில் நடிச்சவர்னு தான் எல்லோருக்கும் என்னை தெரியும். அந்த பெயரை வாங்கி கொடுத்த ராஜேஷ் சாருக்கு நன்றி, இந்த படம் ரிலீஸ் ஆனப்புறம் மிஸ்டர் லோக்கல்ல நடிச்சவர்னு பேர் வாங்கி தரும் என்றார் நடிகர் லக்‌ஷ்மி நாராயணன்.
 
ராஜேஷ் சார் படம் என்றாலே குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். சிவாவை அப்போ எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கார். ஒவ்வொரு காட்சியிலும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அவர் நடனத்திலும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் அனைவரையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றார் நடிகர் ரோபோ சங்கர்.
 
மிஸ்டர் லோக்கல் படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன், ஆதி அவர்கள் இசைக்கு பாடல் எழுதுவது ரொம்ப ஈஸி. ட்யூன் போடும்போது அவரே பாதி பாடலை எழுதி விடுவார். இந்த ஒரு குழுவில் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம் என்றார் பாடலாசிரியர் மிர்ச்சி விஜய்.
 
ஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில் தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அவருடன் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். இயக்குனர் ராஜேஷ் சாரின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும், இந்த படத்துக்கு 9 பாடல்கள் இசையமைத்தோம், அதில் 4 பாடல்கள் தான் படத்தில் இருக்கும். அவருடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். சிவகார்த்திகேயன் அவர்களுக்கு முதன்முறையாக இசையமைக்கிறேன். இந்த படத்தில் அனிருத் பாடியிருப்பது எனக்கு ஸ்பெஷலான ஒரு தருணம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு படம், ஹீரோ ஸ்தானத்திலுருந்து இறங்கி செம்ம லோக்கலா காமெடியில் கலக்கியிருக்கிறார் சிவா என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா சமயத்தில் எப்படி அவரை சந்தித்தேனோ, அதே மாதிரி தான் இன்றும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். எவ்வளவு பெரிய படத்தையும் தன் தோள்களில் தாங்கக் கூடிய ஒரு ஹீரோவாக இன்று மாறியிருக்கிறார். வழக்கமாக விநியோகஸ்தர்கள் தான் எப்போ ரிலீஸ் எப்போ ரிலீஸ்னு கேட்பாங்க. ஆனால் இந்த படத்துக்கு குழந்தைகள், குடும்பங்கள் எப்போ ரிலீஸ்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. ராஜேஷ் ஒரு எளிமையான இயக்குனர். எந்த சூழ்நிலையிலும் கூலாக இருப்பவர். டி.ராஜேந்தர் சாருக்கு அடுத்து அதிகப்படியான துறைகளில் வித்தகர் ஹிப் ஹாப் ஆதி தான். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான, சிரமமான காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தை பண்ணி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை எக்காலத்திலும் மறக்க மாட்டேன் என்றார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா.
 
சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் செய்கிறேன் என்ற பேச்சுவார்த்தை வந்த உடனேயே எனக்கு பெரிய ஹிட் படமா கொடுத்துருங்க என்றார் ஞானவேல்ராஜா சார். குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுற பாடல், பெண்களை திட்டி பாடுற பாடல் என எதுவும் வேண்டாம் சார் என்றார் சிவகார்த்திகேயன். அப்படி எதுவும் இந்த படத்தில் இருக்காது, கிளீன் படமாக இருக்கும். சிவா சார் தொலைக்காட்சியில் இருந்த காலத்தில் இருந்தே நான் அவரின் ரசிகனாக இருக்கிறேன். இந்த படத்தில் இவ்வளவு நடிகர்கள் வந்ததற்கு முக்கிய காரணமே சிவா சார் தான். அத்தனை பேரையும் ஒரே படத்தில் கொண்டு வந்தது தான் சவாலான விஷயம், அதை சிறப்பாக செய்து கொடுத்தார் ஞானவேல்ராஜா. ராதிகா மேடம் இத்தனை வருடங்களாக நடித்து வருபவர், அவரின் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம். நான் நெகடிவ்வான விஷயங்களை விரும்புவதில்லை, ஆதியும் அது போலவே இருந்ததால் எங்கள் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் செட்டானது. அவர் பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. சிவாவுக்கு சமமான கதாபாத்திரம் நயன்தாராவுடையது. நயன்தாராவிடம் கதை சொன்னவுடன் அவருக்கும் மிகவும் பிடித்து போனது. அவரும் படத்தின் மிகப்பெரிய பலம். கோடையில் குடும்பத்துடன் போய் ரசிக்கும் வகையில் ஒரு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் ராஜேஷ்.
 
இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.