![]()

ஸ்டார் _ விமர்சனம்
வளர்ந்து வரும் நாயக நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் கவின். குடும்பச் சித்திரமாக வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்திய டாடா படத்துக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் ஸ்டார்.
திரைப்பட நாயகனாக வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார், இளைஞர் கலை.
இந்த சூழ் நிலையில், விபத்து ஒன்றில் சிக்கி, முகத்தில் காயம் காயம் ஏற்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அவர், குடும்பத்துக்காக வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்.
திரை நாயகன் ஆக வேண்டும் என்கிற அவரது லட்சியம் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
துவக்கக் காட்சியில், ஸ்கூல் பையனாக சைக்கிளில் வரும்போதே மனதைக் கவர்கிறார் கவின். இடை வேளைவரை, இளமைத் துடிப்புடன் அதகளம் செய்கிறார். அதன் பிறகு விபத்தில் சிக்கி வீட்டிலே முடங்கிக் கிடக்கும் காட்சிகளிலும் பரிதாபத்தை வரவழைக்கிறார். தனக்கு நடிப்பு வரவில்லை என குமுறுவது, நிச்சயம் நடிப்பேன் என பொங்குது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நெஞ்சை கொள்ளை கொள்கிறார் கவின்.
அவரது அப்பாவாக தோன்றும் லால், எப்போதும்போல இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். ஒரு அன்பான அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார். மகனை நடிகனாக்கிவிட வேண்டும் என்று துடிப்பதை தன் ஆழமான நடிப்பிலன் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார்.
கவினின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், மகனிடம் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் போதும், குடும்ப சூழல் காரணமாக வேலைக்குப் போக நிர்பந்திக்கும் போதும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதிதி மற்றும் ப்ரீதி முகுந்தன் ஆகிய இரண்டு ஹீரோயின்களும் கொடுத்த பாத்திரத்தை குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை ஈர்க்கிறது. பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி மனிதர் அசத்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவையும் கவனத்தை ஈர்க்கின்றன.
ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ரசிக்க வைக்கும் காட்சிகள், தொய்வில்லாத திரைக்கதை என பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர்.
அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய தரமான படம்.

