Tuesday, September 29

சுழல் தி வோர்டக்ஸ் விமர்சனம்

Loading

சுழல் தி வோர்டக்ஸ் விமர்சனம்

பொதுவாக ஒரு பிரபலமான நட்சத்திரத்தை வைத்துதான் தொலைக்காட்சித் தொடர்கள் உருவாக்கப்படும். ஆனால் ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன், மல்டி ஸ்டாரர் என்று சொல்லத்தக்க வகையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் தொடர் சுழல் என்று சொன்னால் மிகையாகாது.

பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன், குமரவேல் என்று பலரும் நடித்திருக்கும் சுழல், தொடரின் கதையை புஷ்கர் காயத்ரி எழுத,பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியிருக்கின்றனர்.

சின்ன ஊர் ஒன்றில் இயங்கும் சிமெண்ட் தொழிற்சாலையின் தொழிலாளர்களின் தலைவர் பார்த்திபன். கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் பார்த்திபன் தலைமையில் போராடுகின்றனர். நிர்வாகத்துக்கு ஆதரவாக வரும் காவல் துறை அதிகாரிகள் ஸ்ரேயா ரெட்டி, மற்றும் கதிர் தொழிலாளர்களை லத்தி சார்ஜ் செய்கின்றனர்.

அன்றைய தினம் ஊரில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா ஆரம்பமாகிறது .அன்று இரவே தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது. அதே நாளில் பார்த்பனின் இரண்டாவது மகள் காணாமல் போகிறாள். தங்கையை கண்டுபிடிக்க பார்த்திபனின் மூத்த மகள் ஐஸ்வர்யா தீவிர தேடுதல் வேட்டை நடத்த துவங்குகிறார். தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய காப்பீட்டு நிறுவனத்தின் புலன் விசாரணை அதிகாரி ஒருவர் வந்து தன் விசாரணையைத் துவங்குகிறார்.

காணாமல் போன பார்த்திபனின் மகள் கிடைத்தாரா… தொழிற்சாலை தீ விபத்து எதிர்பாராமல் நடந்தததா அல்லது யாராவது திட்டமிட்டு தீ வைத்தார்களா என்பதையெல்லாம் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதை மூலம் சுழல் தொடரில் சொல்லப்பட்டிருக்கிறது.

மகள் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்துவதாகட்டும், தொழிலாளர்களுக்காக நிர்வாகத்திடம் உறுதிபட பேசுவதிலாகட்டும் பார்த்பனின் நடிப்பு நிறைவாக இருக்கிறது. பிரதான வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி சின்ன வேடம் ஏற்ற பூசாரிவரை அனைவரும் மனதில் நிற்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் கதிரிடம் முதிர்ச்சியான நடிப்பை காண முடிகிறது. இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் ஸ்ரேயா ரெட்டி மகன்மீது கொண்ட பாசத்திற்கும், கடமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை ஆழமான நடிப்பில் அழகாக வெளிப்படுதியிருக்கிறார்.

இத்தொடரின் பாராட்டுக்குரிய முதல் நபர் ஒளிப்பதிவாளர் முகேஷ். ஏகப்பட்ட ஆட்கள் நடமாடும் ஏராளமான காட்சிகள் கொண்ட தொடரை மிக அற்புதமாக பிரம்மாண்டமாக படம் பிடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக திருவிழா காட்சிகள் மற்றும் மலை குவாரி காட்சிகளை சொல்லாம்.

சுழல் மாதிரியான கதைகளுக்கு பின்னணி இசை கோர்ப்பது என்றால் இசையமைப்பாளர் ஷ்யாமுக்கு கேட்கவா வேண்டும். தனக்கே உரிய பாணியில் அதைச் செய்து அசத்தியிருக்கிறார். கதையோட்டத்துன் வரும் பாடல்களுக்கும் நன்கு மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு சுழலை மேலும் சுழன்றடிக்கச் செய்து விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

எட்டு பகுதிகளைக் கொண்ட இத்தொடரின் ஒவ்வொரு பகுதி கதைக்கும் திருவிழா நிகழ்வின் கருவை இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

பல இந்திய மொழிகளில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகும் இத்தொடரின் கதையை கோவில் திருவிழா பின்புலத்தில் நம் கலாச்சாரத்தோடு இணைந்த காட்சியமைப்புகளோடு உருவாக்கியதற்காகவே புஷ்கர் காயத்ரி, பிரம்மா மற்றும் அனுசரண் ஆகியோருக்கு தனியாக ஒரு சபாஷ் சொல்லலாம்.