![]()
தேரே இஷ்க் மே_ விமர்சனம்
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் நடித்து வெளியான இந்திப் படத்தின் தமிழ் டப்பிங் வடிவம் இது.
இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றும் தனுஷ், அதீத கோபம் காரணமாக தன் பணியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
அவர் மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று, தகுதிச் சான்றிதழை வாங்கித் தந்தால்தான் மீண்டும் பணியை தொடர முடியும் என்ற சூழல் உருவாகிறது.
தனுஷுக்கு கவுன்சிலிங் கொடுக்க அவரது முன்னாள் காதலியான கிருத்தி சனோன் வருகிறார்.
இருவருக்கும் இடையிலான கல்லூரி கால காதல் பிளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது.
கல்லூரியில் படிக்கும் போது அடி தடி உதை என்று கெத்தாக வலம் வருகிறார் தனுஷ்.
முனைவர் பட்டம் பெறுவதற்காக தனுஷின் கோபத்தை நீக்கி அவரை நல்லவனாக மாற்ற முயற்சி செய்கிறார் கிருத்தி சனோன்.
அரசாங்கத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான கிருத்தியின் தந்தையோ “யூ பி எஸ் சி தேர்வு எழுதி முதலில் பாஸ் பண்ணு…” என்று சொல்வதுடன் தனுஷையும் அவமானப்படுத்துகிறார்.
“யூபிஎஸ்சி தேர்வு எழுதி பாஸ் செய்த பிறகுதான் உனக்கு நான் போன் செய்வேன்…” என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார் தனுஷ்.
தோல்விக்கு மேல் தோல்வி அடைந்தாலும் இறுதியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கிருத்தியை சந்திக்க ஆவலுடன் செல்கிறார் தனுஷ்.
ஆனால் அப்போது அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது.
வெறி கொண்ட வேங்கையாக தனுஷ் கோபமடைந்து அதகளம் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து தனுஷின் தந்தை பிரகாஷ்ராஜ் மரணமடைய அவரை காசிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்கிறார்.
பின்னர் விமானியாகி இந்திய விமான படைப்பிரிவின் சேர்கிறார்.
வழக்கம்போல் பணியின் போது கோபம் வெளிப்பட்டதால் இப்போது கவுன்சிலிங்வரை வந்திருக்கிறது.
முன்னாள் காதலியான கிருத்தி இப்போது இன்னொருவரின் மனைவியாக, நிறை மாத கர்ப்பிணி கோலத்தில் வந்திருப்பதை தனுஷ் எப்படி எதிர்கொள்கிறார்?
கவுன்சிலிங்கிற்குக்கு பிறகு விமான படைப்பிரிவில் பணியாற்ற அவருக்கு அனுமதி கிடைத்ததா? என்பதுதான் படத்தின் பிற்பகுதி.
கோபத்தில் கொந்தளிக்கும் காட்சியில் ஆக்ரோஷத்தையும் காதலி கிருத்தியுடன் இருக்கும் போது மென்மையான பக்கத்தையும் வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார் தனுஷ்.
தனுஷை மாற்ற முயற்சிக்கும் வேடத்தில் கிருத்தி சனோன் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனுஷின் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் நண்பன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கின்றனர்.
புதுமையான காட்சிகள் இன்றி ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட படம் என்றாலும் ஆனந்த் எல் ராய் இப்படத்தை ஒரு காதல் காவியமாகவே உருவாக்கி இருக்கிறார்.
“காதலுக்கு எதற்கு காரணம்…? பியூர் லவ் என்பதே காரணம்தான்…” என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது.
இந்த வசனத்தின் மீதுதான் படமே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பாடல்கள் நம்மை சொக்க வைக்கின்றன.
விமானப்படையின் வான்வழி தாக்குதல்கள் அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
மொழி மாற்ற படம் போன்ற உணர்வே இல்லாமல் தனுஷ் நடித்த நேரடி தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுவது இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட்.
மிகவும் நேர்த்தியாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்துக்கு அழகு தமிழில் ஒரு பெயர் வைக்காமல் ஏன் இந்தி படத்தின் பெயரையே வைத்திருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
பல காட்சிகள் பழையதாக இருந்தாலும் புதிதான கதை களத்தில் தீவிரமான காதலை சொல்லும் இந்தப் படம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.






