வருணன் விமர்சனம்
ராதாரவி சரண்ராஜ் துஷ்யன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் வருணன்.
வடசென்னையை மையப்படுத்தி பல அடிதடி கதைகள் வந்திருக்கின்றன என்றாலும் வருணன் படம் அவற்றில் இருந்து சற்றே மாறுபட்டு வடசென்னையில் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் இரண்டு பெரிய குழுக்களை பற்றிய கதையாக அமைந்திருக்கிறது.
ராதாரவியும் சரண்ராஜும் வடசென்னை பகுதியில் ஆட்களை வைத்து வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.
இருவருக்கும் இடையே போட்டி என்று இருந்தாலும் அது எல்லை மீறாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த இருவரிடமும் பணியாற்றும் இளைஞர்கள் அடிக்கடி பல்லை கடித்துக்கொண்டு மல்லு கட்டி நிற்கின்றனர்.
சரண் ராஜின் மனைவி தனது தம்பியின் துணையுடன் சட்ட விரோதமாக சுண்டக் கஞ்சி காய்ச்சி அதை விற்பனைக்கு அனுப்ப முயலுகிறார்.
இதை மோப்பம் பிடித்து விடும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சரண்ராஜை கையும் களவுமாக பிடிக்க திட்டமிடுகிரார். இப்படிச் செல்கிறது வருணன் படத்தின் கதை.
வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் பிரச்சனை மையமாகக் கொண்ட கதை என்று ஆரம்பிக்கும்போது எதிர்பார்ப்புகளுடன் நிமிர்ந்து உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தால் அந்த எதிர்பார்ப்புகளை படம் நிறைவேற்றவில்லை.வழக்கமான பாணியிலேயே செல்லுகிறது வருணன்.
படத்தை தாங்கிப் பிடிப்பது ராதா ரவியும் சரண்ராஜும்தான்.
சரண்ராஜ் பாத்திரத்தை பேசுவதற்கு சிரமப்படும் மாற்றுத் திறனாளி போல் அமைத்திருப்பது புதுமை என்று இயக்குனர் ஜெயவேல் முருகன் நினைத்திருக்கிறார்.
ஆனால் அந்த பாத்திரம் இயக்குனர் நினைத்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. பல சமயங்களில் எரிச்சல் மூட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மற்றபடி அனுபவிக்க நடிகர்கள் ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவருமே வெகு சிறப்பாக நடித்திருக்கின்றனர். மற்றும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், பிரியதர்ஷன், ஹரிப்பிரியா ஆகியோர் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
சசி இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது. முத்தையாவின் படத்தொகுப்பு காட்சிகளை விறுவிறுப்பாக்கி படத்தை போர் அடிக்காத வகையில் கொண்டு செல்கிறது.
நல்ல கதைக்களனை தேர்வு செய்து படமாக்க முடிவு செய்த இயக்குனர், இன்னும் மெனக்கெட்டு அதை அழகாக செய்து இருக்கலாம்.
மதிப்பெண் 3/5