![]()
வெள்ளக் குதிர _ விமர்சனம்
தவறான வாழ்க்கை வாழும் கதாநாயகன் ஹரிஷ் ஓரி, ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்க, தன் மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனோடு அடைக்கலம் வேண்டி மலை கிராமம் ஒன்றுக்கு செல்கிறார்.
“இனி எந்த தவறும் செய்ய மாட்டேன்… திருந்தி வாழ்வேன்…” என்று மகன் தலையில் சத்தியம் செய்து சொல்கிறார் ஹரிஷ்.
முன்னோர்கள் வசித்து வந்தபோது 400க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த அந்த மலை கிராமத்தில் தற்போது மிகச் சில வீடுகளே இருக்கின்றன.
படிப்பறிவு இல்லாத அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, சொற்ப தொகை கொடுத்து அவர்களது நிலத்தை எழுதி வாங்கிக் கொள்கிறார் முன்னாள் ஊராட்சி தலைவர்.
தற்போதுள்ள பெண் ஊராட்சி தலைவரும் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் பெயருக்கு மட்டும் ரப்பர் ஸ்டாம்ப்போல் அவரை வைத்துக் கொண்டு தானே மறைமுக ஊராட்சி தலைவர் போல் செயல்படுகிறார் முன்னாள் ஊராட்சி தலைவர்.
அரசாங்கத்திலிருந்து வரும் கடிதங்களை கூட ஊராட்சி மக்களிடம் காட்டாமல், அதில் உள்ள செய்தியைக்கூட சொல்லாமல் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து பூட்டி விடுகிறார் முன்னாள் ஊராட்சி தலைவர்.
மனைவி அபிராமி தபால் நிலையத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கு உதவியாக இருப்பதுடன், அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு வரும் கடிதங்களை படித்துக் காட்டி உதவுகிறார்.
மலைவாழ் மக்கள் தங்கள் விசேஷசங்களின் போது தயாரிக்கும் மூலிகை ரசம் என்ற ஒரு வகை சாராயத்திற்கு அடிவாரத்தில் உள்ள ஊரில் கடும் கிராக்கி இருக்கிறது.
இதைத் தெரிந்து கொண்ட ஹரிஷ் மனைவிக்கு தெரியாமல் ஆட்களை வைத்து மூலிகை ரசத்தை தயாரித்து அடிவாரத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்.
ஒரு நாள் போலீசில் மாட்டிக் கொள்ள அதன் பிறகு ஏற்படும் சிக்கல்கள் என்ன?
திருந்தியதாக சத்தியம் செய்த கணவன் மீண்டும் பழையபடி தவறான காரியங்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து சிக்கலில் மாட்டிக் கொண்டதை அபிராமி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் வெள்ளக்குதிர படத்தின் கதை.
பேசுவதில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியாக வரும் ஹரிஷ் ஓரி மலைவாழ் கிராமத்து மனிதனாகவே மாறி அந்த பாத்திரத்துடன் ஒன்றி மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
கணவன் திருந்தி விட்டதாக சொல்லும்போது ஏற்படும் நெகிழ்ச்சியாகட்டும், மீண்டும் தவறான காரியத்தில் ஈடுபட்டு போலீசில் சிக்கிக் கொண்ட பிறகு செய்வதறியாமல் தவிப்பதாகட்டும் அனைத்து காட்சிகளிலும் அருமையாக நடித்திருக்கிறார் அபிராமி.
மலைவாழ் மக்கள் வாழ்வியலை எந்தவித மிகைப்படுத்தலும், சமரசமும் இல்லாமல் எதார்த்தமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார்.
நாமே சில காலம் அந்த மலையில் தங்கி விட்டு வந்தது போன்ற உணர்வைத் தருகிறது கேமராமேன் ராம்தேவின் அருமையான ஒளிப்பதிவு.
பரத் ஆசிகவன் இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்து நம்மை அதனுடன் ஒன்றைச் செய்கிறது.
படம் மெதுவாக நகர்வது போல் தெரிந்தாலும் உண்மையில் இது போன்ற படங்களுக்கு அதுதான் பலம் என்பதை புரிந்து கொண்டால் இந்தப் படத்தை வெகுவாக ரசிக்கலாம்.
சமரசங்கள் இன்றி உருவாக்கப்பட்ட இந்த தரமான படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் நிறையவே வர ஆரம்பிக்கும்.
மதிப்பெண் 4/5


