![]()

அகத்தியா _ விமர்சனம்
திரைப்படத் துறையில் பணியாற்றும் ஜீவா, தான் கலை இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்காக பிரும்மாண்டமான பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் சொந்த பணத்தை செலவு செய்து அரங்கம் அமைக்கிறார்.
படப்பிடிப்புக்கு வரவேண்டிய நாயகனும் இயக்குனரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள படப்பிடிப்பு ரத்தாகிறது.
இதனால் செய்வதறியாது திகைக்கும் ஜீவாவுக்கு அவரது காதலி ராசி கண்ணா ஒரு யோசனை சொல்கிறார்.
அதாவது பயமுறுத்தும் உருவங்களை வைத்து பேய் பங்களா போல் மாற்றி அதை பார்வையிட பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்பதுதான் அந்த யோசனை.
ஆரம்பத்தில் இந்த யோசனை சூடு பிடித்து வசூல் குவிந்தாலும் இளைஞன் ஒருவன் அந்த பேய் பங்களாவில் காணாமல் போவது எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது.
நிஜமாகவே அந்த பங்களாவில் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது ஜீவாவுக்கு புலப்படுகிறது.
1940களில் வாழ்ந்த சித்த வைத்தியர் அர்ஜுனுக்கும் இந்த பங்களாவில் தொடர்பு இருப்பது ஜீவாவுக்கு தெரிய வருகிறது.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அர்ஜுனுக்கும் ஜீவாவுக்கும் என்ன தொடர்பு?
இந்த பங்களாவில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கு காரணம் என்ன என்பது படிப்படியாக திரைக்கதையில் விரிகிறது. எத்தனையோ விதமான பேய் கதைகளை பார்த்த ரசித்த ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான பேய்க்கதை என்றுதான் சொல்ல வேண்டும்.
நமது பண்பாடு கலாச்சாரம் சித்த வைத்தியம் தேசபக்தி சுதந்திரப் போராட்டம் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் கதை வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கும் பாடலாசிரியர் பா. விஜய்.
இதனாலோ என்னவோ படத்தில் எந்த அம்சமும் முழுமையாக இல்லாதது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக பயணப்படும் கதையில் தீபக்குமாரின் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகித்து படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை செவிகளுக்கு விருந்துதான் குழந்தைகளுடன் பெரியவர்களும் தாராளமாக பார்த்து ரசிக்கலாம் இந்த அகத்தியா திரைப்படத்தை.





