Friday, October 23

யசோதா – திரைப்பட விமர்சனம்

Loading

யசோதா திரைப்பட விமர்சனம்

கதையின் நாயகியாக சமந்தா கலக்கியிருக்கும் படம் என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம் யசோதா படத்தை.

கர்பம் தரிப்பதில் சிரமம் உள்ள பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்தணுவையும் ஒரு சோதனைக் குழாயில் வளர்த்து, பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றில் வைத்து வளரவிட்டு குழந்தை பெற வைக்கும் டெஸ்ட் ட்யூப் பேபி என்று ஆரம்பித்த விஞ்ஞான வளர்ச்சி, பின்னர் குழந்தை பெறத் தகுதியில்லாத உயிரணுக்களைக் கொண்ட கணவனுக்கு பதில் வேறு யாரோ ஒரு ஆணின் உயிரணுக்களை தானம் பெற்று குழந்தை பெறுவதாக பரிணாமம் பெற்றது.

இப்போது ஒரு தம்பதியின் உயிரணுகளை தன் உடலில் ஏற்றுக்கொண்டு பத்து மாதம் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய் முறை பிரபலமடைந்து வருகிறது.

இப்படி யாருக்கோ வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தர முன் வந்த யசோதா என்ற பெண்ணைப் பற்றிய படம்தான் இது.

யசோதா வேடத்தில் மொத்த படத்தையும் ஒற்றை ஆளாக சுமந்து நின்று வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் சமந்தா.

வீடு வீடாக உணவு டெலிவரி செய்யும் சமந்தா வாடகைத் தாயாக சம்மதிக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் தலைமையில் இயங்கும் ஈவா என்ற ஹைடெக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் சமந்தா, அங்கே தன்னைப் போலவே வெவ்வேறு காரணங்களுக்காக வாடகைத் தாயாக வந்திருக்கும் பல பெண்களை சந்திக்கிறார்.

நிறைமாத கர்பிணியான ஒரு பெண்ணுக்கு திடீரென இடுப்பு வலி வரவே, அனுமதி மறுக்கப்படும் அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அவள் இறந்து விட்டதாக தகவல் மட்டும் மற்ற பெண்களுக்குச் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே அங்கே சில நிழலான காரியங்கள் நடப்பதாக சந்தேகப்படும் சமந்தா அனுமதி மறுக்கப்படும் அறைக்குள் சாமர்த்தியமாக நுழைந்து விடுகிறார். அங்கே அவருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கன்றன…

உண்மையை அறிந்து கொண்ட சமந்தாவைக் கொல்ல அந்த கொடூர கும்பல் முயற்சிக்கிறது. அவற்றை எதிர்த்துப் போராடும்போது மேலும் சில அதிர்ச்சிகள் வெளியாகின்றன. சந்தாவுக்கு மட்டுமா அதிர்ச்சி?

வாடகைத்தாய் என்ற போர்வையில் இளம் பெண்களை குழந்தை பெற்றுத் தரும் இயந்தரமாக மாற்றும் ஒரு கொடூர கும்பல் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று அறிய வரும் பார்வையாளர்களுக்கு வருவதோ பேரதிர்ச்சி…

சமந்தாவின் திரை வாழ்வின் மிக முக்கியமான படம் யசோதா என்பதில் ஐயமில்லை. டாக்டராக வரும் உண்ணி மேனனுடன் தனக்குள்ள ஈடுபாட்டை அவரிடமே சொல்லும் விதத்தில் அழகாக தன் காதலை வெளி்படுத்துவதிலாகட்டும், ஈவா மருத்துவமனையில் நடக்கும் அக்கிரமங்கள் தெரிந்ததும் வெகுண்டெழுந்து ஆக்ரோஷமாக போரிட்டு அதை எதிர்கொள்வதாகட்டும், தங்கை மீது தாயைப்போன்ற பாச மழையைப் பொழிவதிலாட்டும்….. எல்லாவற்றிலுமே அசத்தியிருக்கிறரார் சமந்தா.

தன் அழகு குறித்து அதீத கர்வம் கொள்ளும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் வரலட்சுமி. ஆனால் நிறைய காட்சிகளில் திரும்பத் திரும்ப ‘அழகு’ என்ற வார்த்தையை அவர் உச்சரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு காட்சியில்கூட ‘அழகு’ என்று அவர் சொல்லவில்லை. எல்லாவற்றிலும் ‘அளகு…’  ‘அளகு..’ என்றே உச்சரித்திருக்கிறார். அந்த தமிழ்ப் பெண் டப்பிங் பேசும்போது யாராவது திருத்தியிருக்கலாமே…

வலுவான கதைக்கு தெளிவான திரைக்கதை அமைத்து அதை விறுவிறுப்பாக திரையில் சொல்லியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ்.

படத்தின் மிகப் பெரிய பலம் சுகுமாரின் ஒளிப்பதிவு. கண்ணில் ஒற்றிக்கொள்வதுபோல் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். ‘கும்கி’,  ‘தேன்’  என்று வெளிப்புற்ப்படப்பிடிப்புகளில் தன் முத்திரையைப் பதித்த சுகுமார், யசோதா படத்தில் உட்புறப் படப்பிடிப்பில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

ஈவா ஹைடெக் மருத்துவமனை உருவாக்கத்தில் கலை இயக்குநரின் கைவண்ணம் பளிச்சிடுகிறது.
மணி ஷர்மாவின் இசையில் உருவான பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் அழகான, ஆழமான படம் யசோதா

மதிப்பெண் 3.5 5