Monday, March 24

2K லவ் ஸ்டோரி _ விமர்சனம்

Loading

இளமை ததும்பும் இனிய பாடல் மற்றும் இளம் ஜோடியின் அட்டகாசமான அதிரடி ஆட்டத்துடன் தொடங்குகிறது டூ கே லவ் ஸ்டோரி.

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான நட்பை இதைவிட அழகாகவும் ஆழமாகவும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

சிறு வயது முதல் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து, ஒன்றாகவே வளரும் ஜெகவீரும் மீனாட்சி கோவிந்தராஜனும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.

வளர்ந்த பின்பு இவர்கள் நட்பு இன்னும் பலப்படுகிறது. தோழியின் மென்சஸ் தினத்தை இயல்பாக நினைவு கூறும் நல்ல நண்பனாக இருக்கிறார் நாயகன் ஜெகவீர்.

இருவரும் தங்களுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து ‘ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் ‘ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் ஜூனியர் ஆன லத்திகா பாலமுருகனின் பிரச்சனையை தீர்ப்பதற்காக, ஜெகவீரை அவரது காதலனாக நடிக்க சொல்கிறார் மீனாட்சி.

பின்னர் நிஜமாகவே அவர்கள் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். ஜெகவீருடன் பைக்கில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு லத்திகா மரணம் அடைகிறார்.

ஜகவீர் மற்றும் மீனாட்சி ஆகியோரது பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முனைப்பு காட்டும்போது, தாங்கள் அவ்வாறு பழகவில்லை என்பதை இருவருமே உறுதிபட தெரிவிக்கிறார்கள்.

பின்னர் பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க அண்ணன் தங்கை இருக்கும் வீட்டில் பெண் கொடுத்து பெண் எடுப்பது போல் அண்ணனை மீனாட்சிக்கும் தங்கையை ஜெகவிருக்கும் திருமணம் செய்ய அனைவரும் முடிவு செய்கின்றனர்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? அவற்றை வெற்றிகரமாக தீர்க்க முடிந்ததா இல்லையா என்பது படத்தின் இரண்டாவது பாதி.

படத்தில் இழையோடும் மெலிதான நகைச்சுவை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நண்பர்கள் குழுவில் பால சரவணன் அடிக்கும் கொட்டம் வெகுவாகவே ரசிக்க வைக்கிறது.

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று வரும் உதவி இயக்குனர் படமாக்குவதற்காக ஒரு கதையைக் கேட்க அவருக்கு ஜகவீர் மீனாட்சி இருவருக்கும் இடையிலான நட்பை கதையாக சொல்லுவது போல் படத்தை வளர்த்துக் கொண்டு செல்லும் உத்தியும், அவ்வப்போது அந்த உதவி இயக்குனர் தலைகாட்டி கேள்விகள் கேட்டு படத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதும் புதுமையாக இருக்கிறது.

நடிப்பை பொறுத்தவரை முதல் மதிப்பெண் மீனாட்சி கோவிந்தராஜனுக்குதான். அழுத்தமான பாத்திரப்படைப்பை அழகாக உள்வாங்கி, அருமையாக நடித்திருக்கிறார் மீனாட்சி.

அறிமுக நாயகன் என்றாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார் ஜெகவீர்.

முதல் பாதி வரை சீரான வேகத்தில் சிக்கலின்றி சென்ற திரைப்படம் இரண்டாம் பாதியில் சற்றே தடுமாறுகிறது.

ஆயினும் பிற்பகுதியில் வரும் சிங்கம்புலி மற்றும் குழுவினரின் கும்மாளம் ரசிக்க வைக்கிறது.கண்ணில் ஒற்றிக்கொள்ளத்தக்க ஓவியம் போல் மிக நேர்த்தியாக அமைந்திருக்கும் வி எஸ் ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் செல்கிறது.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் டி இமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்திருக்கின்றன.

2கே கிட்ஸ் மட்டுமல்ல, எல்லா வயதினரும் ரசித்துப் பார்க்கக்கூடிய படம் 2கே லவ் ஸ்டோரி.

மதிப்பெண் 3/5