96 – விமர்சனம்

0

 391 total views,  1 views today

மழைத்துளி பின்னனி ஓசையோடு திரைப்படம் தொடங்குகிறது.முதல் மழைத்துளியும் மண் துகளும் சந்திக்கும் பொழுது எழுகின்ற மண் வாசனையோடு வெள்ளிதிரையின் பின்புறம் நின்று கொண்டு கதை சொல்ல தொடங்குகிறார் இயக்குனர் பிரேம்குமார்.கதை சொல்வது என்பது மிகப்பெரிய கலை,அதன் வல்லமை திரைக்கதையில் வெளிப்பட வேண்டும்.முதல் படத்திலேயே அதில் மிக கைதேர்ந்தவராக தெரிகிறார் இயக்குனர் பிரேம்குமார்.

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை…
என்று தொடங்கி
புவி போகிற போக்கில் கை கோர்த்து நடப்பேன்
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
ஆரோ ஆரோ ஆராரிரோ …………….
என்று முடிகிற வரிகளோடு ராம் என்ற பெயரில் ஒரு பக்குவபட்ட பயண புகைப்படக்காரனாக விஐய் சேதுபதி நமக்கு அறிமுகமாகிறார். வாழாத என் வாழ்வை வாழவே தாளமல் மேலே போகிறேன் என்ற வரிகளின் மூலம் ஆரம்பத்திலேயே கதைக்கு பொடி வைக்கிறார் இயக்குனர்.

இந்த பாடல் வரிகள், கடந்த காலத்தின் கவலைகளை தோளில் சுமக்காமலும், எதிர்காலத்தை பற்றிய எந்த கவலை இல்லாமலும் அந்தந்த கணத்தில் வாழ்கின்ற ஒரு பயண புகைபடக்காரனின் மனநிலையை பிரதிபலிப்பது மட்டுமில்லாமல், பயணிக்கிற ஒவ்வொரு இடமும்  அவர் கண்கள் வழியாக அதன் அழகை மெருகூட்டிக் காண்பிக்கபடுகிறது. அவர் புகைப்பட துறையில் பயிற்சி அளிப்பவராக இருக்கிறார். எதேச்சையாக அவர் பயின்ற பள்ளி வழியாக பயணிக்க நேரிடுகிறது.பல வருடங்களுக்கு பிறகு அவர் பயின்ற வகுப்பறைக்கு செல்கிறார். தொடுதல், உறைந்து போய் நிற்கும் பாவனை, அந்தப் பார்வையில் நடிப்பின் ஆழத்தை அளக்கிறார். விஜய் சேதுபதி தான் ஒரு கை தேர்ந்த கலைஞன் என்பதை உறுதி செய்திருக்கிறார்.

கதையில் 22 வருடங்கள் பின்னோக்கி செல்கிறார் இயக்குனர். பத்தாம் வகுப்பு மாணவன் ராமின் பள்ளிப் பருவங்களை அந்த பருவத்தில் முதன்முதலாக ஒரு பெண்ணின் மீது வரும் ஈர்ப்போடு மிக அற்புதமாக அதன் அழகு சற்றும் குறையாமல் படமாக்கியிருக்கிறார். அந்தப் பெண் ஜானகி என்ற பெயரில், மடந்தைக்கே உரித்தான அத்தனை குணாதிசயங்களோடு அறிமுகபடுத்தபடுகிறார். காமம் கலக்காத அந்த உறவை மிக நேர்த்தியாக, அதன் கண்ணியம் குறையாமல் கையாண்டிருப்பததற்காகவே இயக்குநரை தனியாகப் பாராட்ட வேண்டும்.
90 களில் பிறந்தவர்களுக்கு, நாட்குறிப்பை பல வருடங்களுக்கு பிறகு படிப்பது போல் உணர்வு தோன்றும். நம்மையே வெள்ளித்திரையில் பார்ப்பது போல் உணர்வு. பல பேர் அந்த முதல் ஈர்ப்பை சம்பந்தப்பட்ட பெண்ணிடமோ இல்லை பையனிடமோ சொல்லியிருக்க மாட்டார்கள்.அந்த சொல்லப்படத காதலின் சந்தோஷம் கலந்த வலியை இந்தப் படத்தில் உணர முடியும்.

ரீயூனியன் நிகழ்ச்சியில் 23 வருடங்களுக்கு பிறகு ஜானுவாக திரிசா வருகிறார். திருமணமான காதலியிடம் தன் காதலை கண்ணியம் குறையாமல் விஜய்சேதுபதி பரிமாறிக்கொள்ளும் விதம் மிக அழகு.அந்த வலியை இருவரும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். திரிசா நடிப்பில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா நெஞ்சைத் தொடும் பாடல்களையும், காட்சிக்கு உயிரூட்டும் அற்புதமான பின்னனி இசையும் கொடுத்திருக்கிறார். காதலின் சந்தோசத்தை,வலியை பின்னனி இசையில் மீட்டி அந்த உணர்வுக்கு உயிர் அளித்திருக்கிறார். ஒலி அமைப்பில் பறவைகளின் இரைச்சலை அதிகமான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

கலை இயக்குநரின் கை வண்ணத்தில் விஜய் சேதுபதியின் இல்ல அமைப்பு, ரீயூனியன் நிகழ்ச்சி அலங்காரங்கள் அருமை.
90களின் கதைக் களத்தில் இளையராஜாவின் இசை தவிர்க்க முடியாத ஒன்று. அவரது பாடல்கள் கதையோடு பயணிக்கிறது.படத்தின் பெயரில் இளையராஜா பெயரை இணைத்திருப்பது சிறப்பு.
பள்ளியில் படிக்கும்போது பலமுறை ராம் கேட்டும், யமுனை ஆற்றிலே பாடலைப் பாடாத ஜானகி, 23 வருடங்களுக்கு பிறகு மின்தடை ஏற்பட்ட அசாதாரண சூழலில் அந்தப் பாடலைப் பாடுவது நெகிழ்ச்சி ஏற்படுத்தும் அற்புதக் காட்சி.
கதையுடனும் அதன் காட்சியமைப்புக்களுடனும் பார்வையாளர்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் அதிசயம் மிக அரிதாக ஏதாவது ஒரு திரைப்படத்தில்தான் நிகழும். 96 படத்தில் அது நிகழ்ந்திருக்கிறது.

இந்த படைப்பிற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

-சிலம்பரசன்

Share.

Comments are closed.