Wednesday, November 18

‘தி ரோட்’ _ விமர்சனம்

Loading

‘தி ரோட்’ விமர்சனம்

Cast: Trisha, Shabir, Santhosh Pradap, Miya Gorge, Vivek Prasanna, MS Baskar, Vela Ramamoorthy

Directed By : Arun Vasikaran

Music By : Sam.CS

Produced By : AAA Cinema Pvt Ltd.

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு த்ரிஷாவின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளி வீசும் வைரமாக பிரகாசிக்கிறது ‘தி ரோடு’ திரைப்படம் என்று சுருக்கமாக சொல்லிவிடலாம்.

காரணம் ஒற்றை ஆளாக மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து அசத்தி இருக்கிறார் திரிஷா.

த்ரிஷா தன் கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் மகனுடன் நீண்ட தூர பயணம் ஒன்றுக்கு திட்டமிடுகிறார். ஆனால் கர்ப்பமாக இருக்கும் த்ரிஷா பயணம் செய்வது நல்லதல்ல என்ற டாக்டர் அறிவுறுத்துவதால் தான் போகாமல் மகன் மற்றும் கணவரை அனுப்பி வைக்கிறார்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் கார் விபத்துக்குள்ளாகி அவர்கள் இருவருமே உயிரிழக்க நேரிடுகிறது.

விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் திரிஷாவுக்கு சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அங்கு கிடைக்கும் தடயங்களை வைத்து யோசிக்கும் போது நடந்தது விபத்து அல்ல…  திட்டமிட்ட சதி என்பது புரிகிறது.

மேலும் இது குறித்து நோண்ட ஆரம்பிக்கும் போது பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரிய வருகின்றன.

த்ரிஷாவின் கதை இவ்வாறு திரையில் காட்டப்படும் போது ஆசிரியர் ஒருவரை காதலிக்கும்  மாணவியின் கதையும் காட்டப்படுகிறது.

தன் காதலை ஏற்க மறுக்கும் ஆசிரியரை அந்த மாணவி அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி பழி வாங்குகிறார்.

திரிஷாவின் கதையும் பேராசிரியர் கதையும் ஒரு முக்கிய புள்ளியில் இணைகின்றன. இந்தப் புள்ளியை பார்வையாளர்கள் சுலபமாக யூகிக்கும் வகையில் அமைந்திருப்பது திரைக்கதையின் பலவீனம்.

கல்லூரி பேராசிரியர் வேடத்தில் அடக்கி வாசித்திருக்கும் டேன்சிங் ரோஸ் சபீர் கோரமான மற்றொரு முகத்தை காட்டும் போது சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

சில படங்களில் கதாநாயகியாகவும் பிரதான வேடங்களிலும் நடித்த மியா ஜார்ஜ் இந்த படத்தில் திரிஷாவின் தோழியாக சிறிய வேடத்தில் குறைவான காட்சிகளிலேயே வந்தாலும் நிறைவாகவே செய்திருக்கிறார்.

திரிஷாவின் கணவராக வரும் சந்தோஷ் பிரதாப், புலனாய்வில் த்ரிஷாவுக்கு உதவும் காவலர் எம் எஸ் பாஸ்கர், டெரரான வேடத்தில் மிரட்டும் செம்மலர் அன்னம் ஆகியோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

சஸ்பென்ஸ் திரில்லர் என்றால் இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு அறுசுவை விருந்து போலத்தான்.  ‘தி ரோட்’ படத்துக்கு சாம் சி எஸ்  இசையமைப்பு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

நெடுஞ்சாலையில் கார்கள் விபத்துக்குள்ளாகும் காட்சிகளை ஆங்கில படங்களுக்கு நிகராக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே ஜி வெங்கடேஷ்.

முதல் பாதியை சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் கொண்டு சென்ற இயக்குனர் அருண் வசீகரன் இரண்டாம் பாதியில் அதை செய்யத் தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மதிப்பெண் 3/5