Friday, November 13

மூன்றாம் மனிதன் விமர்சனம்

Loading

இருமனம் ஒன்றிணைந்து மண வாழ்வில் ஈடுபடும்போது மூன்றாம் மனிதன் ஒருவன் அந்த வாழ்வில் குறுக்கிட்டால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும் என்பதை சொல்ல முயன்றிருக்கும் படம்தான் மூன்றாம் மனிதன்.

மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த கொலையை துப்பு துலக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி பாக்யராஜிடம் வருகிறது.

சோனியா அகர்வாலை பாக்யராஜ் விசாரிக்கிறார். தொடர்ந்து சோனியா அகர்வால் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி பிரணாவையும் விசாரிக்கிறார்.

பிரணாவின் கணவர் ராம்தேவ் மகா குடிகாரர். தன் மனைவிக்கு மற்றொரு ஆடவனுடன் தொடர்பு இருப்பதை அறிந்து இன்னும் அதிகமாக குடித்துவிட்டு புலம்புகிறார் ராம்தேவ்.

மனைவியுடன் தகாத உறவு கொண்டிருந்ததால்தான் ராம்தேவ் சோனியாவின் கணவரை கொலை செய்தாரோ என்ற கோணத்தில் பாக்யராஜின் விசாரணை தொடங்குகிறது.

உண்மையான கொலையாளி யார்? எதற்காக இந்த கொலை நடைபெற்றது?

பாக்கியராஜ் இதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மூன்றாம் மனிதன் படத்தில் கதை. கம்பீரமான போலீஸ் அதிகாரிகளையும் கறைபடிந்த காவல்  அதிகாரிகளையுமே கண்ட நமக்கு, பாக்யராஜின் யதார்த்தமான போலீஸ் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

சோனியாக அகர்வாலுக்கு சிறிய வேடம் தான் என்றாலும் அதை நிறைவாகவே செய்திருக்கிறார்.

வேலைக்காரியாக வரும் பிரணா வேடம்தான் படம் முழுக்க வரும் முக்கியத்துவம் மிகுந்த பாத்திரமாக அமைந்திருக்கிறது.

தன் பாத்திரப்படைப்பை உணர்ந்து அவரும் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

குடிகார கணவர் வேடத்தில் வரும் ராம்தேவுக்கு செயற்கை தலை முடி (விக்) மட்டும்தான் பொருத்தம் இல்லையே தவிர, அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.

மணிவண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

வேணி சங்கர் தேவ்ஜி இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. அம்ரிஷின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

குடிப்பழக்கமும் தகாத உறவுகளால் ஏற்படும் விளைவுகளும் ஒரு குடும்பத்தை எப்படி சீரழிக்கின்றன என்பதை முதல் படத்திலேயே சொல்ல முயன்ற இயக்குனர் ராம்தேவ் பாராட்டுக்குரியவர்.படத்தின் கதை வசனம் இவரை எழுதி இருக்கிறார்.

நல்ல கதையை படமாக்க தேர்வு செய்த ராம்தேவ் அதற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து படமாக்கி இருந்தால் இன்னும் தரமான படமாகவே மூன்றாம் மனிதன் வந்திருப்பான்.