Tuesday, November 17

மேரி கிறிஸ்மஸ் விமர்சனம்

Loading

மேரி கிறிஸ்மஸ் விமர்சனம்

‘பாஷி’ இணைய தொடர் மூலம் அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் இன்னும் அதிக அளவில் இந்திய ரசிகர்களிடையே அவரை கொண்டு சேர்க்கும் என்பது உறுதி.

கணவனுடன் ஒத்து வாழப் பிடிக்காமல் குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் கத்ரீனா கைஃப், ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று உணவு விடுதி ஒன்றில் விஜய் சேதுபதியை முதல் முறையாக சந்திக்கிறார். 

இருவருக்கும் இடையே ஏற்படும் பழக்கம் நெருக்கமாக, கத்ரீனா கைப் வீட்டுக்கு வருகிறார் விஜய் சேதுபதி.

ஆனால் அங்கே அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.  கத்ரீனா கைஃப் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

கொலைப்பழி விஜய் சேதுபதி மீது விழுகிறது இந்த பழியில் இருந்து அவர் எப்படி தப்பித்தார்?  உண்மையில் கணவரை கொன்றது யார்?  என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் படம் தான் மேரி கிறிஸ்மஸ.

தென்னிந்திய நடிகைகளுடனேயே அதிகமாக பார்த்து பழகிய விஜய் சேதுபதியை, வட இந்திய நட்சத்திரமான கத்ரீனா கைப்புடன் இணைத்துப் பார்ப்பது ஒரு புதிய அனுபவமாக தான் இருக்கிறது.

ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பின் மூலம் நம் நெஞ்சில் இடம் பிடிக்கிறார் கத்ரீனா கைஃப்.

கொலைப் பழியில் சிக்குண்டு குழந்தையுடன் பரிதவிக்கும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார் கத்ரீனா கைஃப்.

விஜய் சேதுபதியுடன் லிப் லாக் கொடுக்கும் காட்சியில் ரசிகர்களை கிறங்க வைக்கிறார் கத்ரீனா கைஃப்.

படத்தின் முதல் பகுதி சுவாரஸ்யமான காட்சிகள் நிரம்பி இருந்தாலும் இரண்டாவது பகுதி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வந்து விடுகிறது.

பேப்பரில் எழுதப்பட்டிருக்கும் கதையை திரையில் எப்படி வடிப்பது என்ற கலையை மிக அருமையாக கற்றுத் தேர்ந்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் ராகவன்.

இயக்குனருக்கு பக்க பலமாக இருந்து கதைக்கு மெருகேற்றுகின்றனர் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டனும், இசையமைப்பாளர் பிரிட்டமும்.

குறிப்பாக இரவு காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் திறமைக்கு சான்று.

காவலராக வரும் ராதிகா சரத்குமார், இன்ஸ்பெக்டராக வரும் சண்முகராஜன், மற்றும் கவின் பாபு ராஜேஷ் ராதிகா ஆப்தே ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கின்றனர்.

மொத்தத்தில் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் இலக்கியத் தரமான ஒரு மர்ம நாவலை படிப்பது போல் அமைந்திருக்கிறது.

மதிப்பெண் 3.5/5