Tuesday, October 27

பிரேமலு _  விமர்சனம்

Loading

பிரேமலு _  விமர்சனம்

இளமைத்துள்ளல் மற்றும் காமெடி என்று குறிவைத்து அடித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்வரை ரசிக்க.. சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்த சச்சின், நம்ம சேலத்தில் கல்லூரியில் படிக்கிறார். சக மாணவி மீது காதல். ஒருவழியாக, கல்லூரி முடியும் – நான்காம் வருட இறுதியில் – காதலை சொல்கிறார்.

அந்தப் பெண், ‘நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்’ என்று சொல்ல.. நாயகன் துவண்டு போகிறார்.

பிறகு வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறார். அதுவும் நிறைவேறாமல் போகிறது.

பிறகு ஹைதராபாத்தில் எம்.டெக் படிப்புக்கான கேட் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்கிறார்.
அதுவும் சரிவரவில்லை. ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என தீர்மானிக்கிறார்.

பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆசிரியரின் திருமணம், தெலுங்கானாவிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடக்கிறது. அங்கு செல்லும்போது, ரீனு என்கிற இளம்பெண்ணை பார்க்கிறார் நாயகன்.

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொள்கிறது. அந்தப் பெண்ணை ஈர்க்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்கிறார் சச்சின்.

திருமணம் முடிந்ததும், காரில் ஹைதராபாத் திரும்பும் சச்சின் உடன் ரீனுவும் அவரது தோழியும் வருகிறார்கள்.

ரீனு தனக்கு வரும் எதிர்காலக் கணவரிடம் எதிர்பார்க்கும் எந்தவொரு விஷயமும் சச்சினிடம் இல்லை என்பது தோழி மூலம் தெரிகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
அதிரடி, தடக் திருப்பம் என்றெல்லாம் இல்லாத சாதாரண காதல் கதை. ஆனால் ரசித்துச் சிரிக்கும்படியான காட்சிகளால் நம்மை ஈர்த்து விடுகிறது படம்.

மீண்டும் ஒருமுறை இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுதான் இந்தப் படத்தின் வெற்றி. அந்த வகையில் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.யை பாராட்டலாம்.

நாயகன் நஸ்லென், நாயகி மமிதா பைஜு ஆகியோர் காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். நாயகன் தோழன் அமல் டேவிஸ், வில்லன் ஷ்யாம் மோகன், நாயகியின் தோழிகள் அகிலா பார்கவன் உள்ளிட்ட அனைவருமே பாத்திரம் உணர்ந்து நடிப்பை அளித்து உள்ளனர்.

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு, விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை, ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் படத்தொகுப்பு ஆகியவை சிறப்பாக அமைந்து படத்துக்கு பக்க பலமாக  உள்ளன.

உறுத்தல் இல்லாத தமிழ் டப்பிங்கும் ப்ளஸ்

மொத்தத்தில் சிரித்து ரசிக்கலாம்.