Friday, October 23

வல்லவன் வகுத்ததடா _ விமர்சனம்

Loading

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

தயாரிப்பு : ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், அருள் டி. சங்கர் மற்றும் பலர்

இயக்கம் : விநாயக் துரை

ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் பண தேவை என்பது ஏற்படுகிறது. இவர்களிடத்தில் எதிர்பாராவிதமாக கோடிக்கணக்கிலான பணம் கிடைக்கிறது. இந்த பணம் உண்மையில் கடைசியாக யார் கையில் சேர்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ஏடிஎம் மிஷினில் காவலாளியாக பணியாற்றுபவரின் இளைய மகள் தனது காதலருடன் ஓடிவிட, அவருடைய மூத்த மகள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வாடகை வாகனத்திற்கு சாரதியாக பணியாற்றுகிறார்.

சில நாட்கள் கழித்து ஓடிப்போன இளைய மகள் கர்ப்பிணியாக தன் கணவருடன் தாய் வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு.. தந்தைக்குரிய கடமையை செய்ய, பைனான்சியர் ஒருவரிடத்தில் வட்டிக்கு பணம் வாங்குகிறார் தந்தை.

அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்து குறித்தும் , அத்துடன் அவரது தந்தை எடுத்து வந்த இரண்டு லட்சம் ரூபாய் காணவில்லை என்றும் மூத்த மகள் புகார் கொடுக்கிறார்.

அந்தப் புகாரின் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? விபத்துக்குள்ளான தந்தை காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? அவரைக் காப்பாற்றுவதற்காக தேவைப்பட்ட பணம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் திரைக்கதை.

தாயுடன் தனியாக வசிக்கும் இளம்பெண் ஒருவர் சற்று முதிர் கண்ணனாக இருக்கும் ஆண்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றி பணம் பறிக்கிறார்.

நண்பர்கள் இருவர் தங்களது அன்றாட வாழ்வாதாரத்திற்காக சிறிய சிறிய பண திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி.. வாங்கிய கடனை அடைப்பதற்காக புகார் தருபவர்களிடம் லஞ்சம் வாங்குகிறார்.

உடல் உறுப்புகளை மட்டுமே நம்பி அவர்களுக்கு நிதி உதவி செய்யும் பைனான்சியர் ஒருவருக்கும் நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் ஒரே தருணத்தில் பண தேவை ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில் தன்னை அவமானப்படுத்திய பைனான்சியர் வீட்டிலிருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் வாகனத்தின் மூலம் கை மாறுகிறது.

இந்த பணத்தை கைப்பற்ற கதாபாத்திரங்கள் முயற்சிக்கிறது. இதில் யார் கையில் பணம் சென்றடைகிறது என்பது உச்சகட்ட காட்சி.

சுவாரசியம் குறையாமல் டார்க் காமடி ஜேனரில் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக இளம் பெண் ஒருவர் பல ஆண்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றும் போது … அதனை திரையில் சொன்ன விதம் அதிரவைக்கிறது.

மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறி கீழே விழுவது எதிர்பாராமல் நடைபெறும் ஒரு சம்பவம். இதை இரு வெவ்வேறு விதமான காட்சிகளில் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் ராஜேஷ் பாலச்சந்திரனின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. கதையின் நாயகனாக நடித்திருக்கும் சரண் தேஜ்ராஜ் மற்றும் அவரது நண்பராக நடித்திருக்கும் ரெஜின் ரோஸ் இயல்பான நடிப்பால் மனதை கவர்கிறார்கள்.

அறிமுக நடிகை சுவாதி மீனாட்சி இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

திரைக்கதையில் பகவத் கீதையின் பொன்மொழிகள் அத்தியாயங்களில் தலைப்பிற்காக பயன்படுத்தப்பட்ட விதத்திலும், காவல்துறை அதிகாரியின் குள்ளநரித்தனத்தை காட்ட ஹைனாவின் குரலை பயன்படுத்திய விதத்திலும் இயக்குநர் நம்மை கவர்கிறார்.

ஒளிப்பதிவு, பின்னணி, எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.

பணத்திற்கு பின்னால் அலையும் கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான படைப்பு.

மொத்தத்தில் ரசித்துப் பார்க்கக்கூடிய படம்.

மதிப்பெண் 3.5/5