Saturday, October 24

ரூபன்’ – விமர்சனம்

Loading

‘ரூபன்’ – விமர்சனம்

அடர்ந்த வனத்தை ஒட்டிய, சின்ன கிராமம். காட்டுப்பகுதியில் கிடைக்கும் தேனை எடுத்து விற்பதுதான் பலருக்கும் பிழைப்பு.
இந்த கிராமத்தில் வசிக்கின்றனர் தம்பதியரான நாயகன் விஜய் பிரசாத் – நாயகியான காயத்ரி ரெமா.
இருவருக்கும் நீண்ட காலமக குழந்தை பாக்கியம் இல்லை. இவர்களை ஊர் மக்களில் பலர் கிண்டல் செய்வதோடு ஒதுக்கியும் வைக்கின்றனர்.
ஒரு முறை நாயகன் விஜய் பிரசாத், காட்டுக்கு தேன் எடுக்கச் செல்கிறார். அப்போது நடுக்காட்டில் பச்சிளம் குழந்தை ஒன்று அழுதபடி கிடக்கிறது.
குழந்தையின் பெற்றோரைத் தேடியும் கிடைக்காததால், குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். அவரும் மனைவியும் குழந்தையை பாசத்தோடு வளர்க்கின்றனர்.

இதற்கிடையே, காட்டு விலங்குகளை வேட்டையாடும் வில்லன் கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. அவர்களுக்கு தடையாக எதிர்த்து நிற்கிறார், நாயகன் விஜய் பிரசாத்.
இதனால் ஆத்திரமாகும் வில்லன், சூழ்ச்சி செய்து விஜய் பிரசாத்தான் வேட்டையாடுகிறார் என கிராமத்து மக்களை நம்ப வைக்கிறார்.
இந்த நிலையில் ஊர் மக்களில் சிலர் சபரிமலைக்கு மாலை போடுகிறார்கள். நாயகனும் சபரி மலைக்கு வர விரும்புகிறான். ஆனால் அவனை கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே நாயகன் அவனது மகனையே தனக்கு மாலை அணிவிக்கச் செய்து தனியே, சபரி மலைக்குக் கிளம்ப ஆயத்தமாகிறார்.
அந்த நேரத்தில் கிராமத்துக்குள் ஒரு புலி புகுந்துவிடுகிறது. ஆகவே வனத்துறையினர், கிராமத்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். குறிப்பாக எவரும் சபரி மலைக்குப் போகக் கூடாது என்கிறார்கள்.

இதற்கும் விஜய் பிரசாத் தான், என எண்ணி, அவர் மீது பழி சுமத்துகின்றனர், கிராம மக்கள்.
தான் குற்றமற்றவன் என நிரூபிக்க, ஐய்யப்பனை நோக்கி வேண்டுகிறான் நாயகன்.

அவனது எண்ணம் நிறைவேறியதா என்பதே கதை.

நாயகன் விஜய் பிரசாத், சிறப்பாக நடித்து உள்ளார். குழந்தை இன்மையை பிறர் கிண்டலடிக்கும்போது ஆற்றாமையை வெளிப்படுத்துவதாகட்டும், ஆத்திரத்தில் பொங்குவதாகட்டும்… சிறப்பான நடிப்பு.

நாயகி காயத்ரி ரெமாவும் சிறப்பாக நடித்து உள்ளார்.

சார்லியின் கதாபாத்திரம், கதைக்குள் வரவில்லை என்றாலும் வழக்கம்போல சிறப்பாக நடித்து உள்ளார்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் அசத்தி இருக்கிறார். காடுகளை கண் முன்னே கொண்டு வந்து மிரட்டுகிறார்.
அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்கள் – குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் – சிறப்பு.
பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

மொத்தத்தில் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கக்கூடிய படம்.

மதிப்பெண் 3/5