![]()

செல்லக்குட்டி _ விமர்சனம்
1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் கதைதான் செல்லக்குட்டி.
ஒரே பள்ளியில் டிட்டோ, மகேஷ் மற்றும் தீபிக்ஷா மூவரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். டிட்டோவும் மகேஷும் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள்.
கவிதை எழுதுவதிலும் படங்கள் வரைவதிலும் திறமைசாலியாக திகழ்கிறார் மகேஷ்.
தாய், தந்தை இல்லாத மகேஷ் மீது தீபிக்ஷா அனுதாபத்துடன் அன்பு செலுத்த, அதை காதல் என்று புரிந்துக்கொள்ளும் மகேஷ், அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார்.
ஆனால், தீபிக்ஷாவுக்கோ மகேஷின் நண்பர் டிட்டோவின்மீதுதான் ஈடுபாடு. மகேஷ் தீபிக்ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை தீபிக்ஷா நிராகரித்து விடுகிறார்.
காதலால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத மகேஷ், பொதுத் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார்.
மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் தீபிக்ஷா தான் மனதார காதலிக்கும் டிட்டோவை மணந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை காலம் உருவாக்குகிறது .
ஆனால், நண்பன் காதலித்த பெண்ணை தான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கருதும் டிட்டோ தீபிக்ஷாவை மணந்து கொள்ள மறுத்து விடுகிறார்.
இப்படி முக்கோண காதல் கதையாக விறுவிறுப்புடன் செல்கிறது செல்லக்குட்டி.
முடிவில் தீபிக்ஷா யாரை திருமணம் செய்து கொண்டார்? அதன் பின்னும் தொடரும் துயர சம்பவங்கள் என்ன என்பதை சொல்லும் படம்தான் ‘செல்ல குட்டி’.
படத்தின் இறுதிப் பகுதியில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.
நாயகர்களாக நடித்திருக்கும் அறிமுக நடிகர்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக பள்ளி மாணவர்களாகவும், படிப்பு முடிந்து முதிர்ச்சி அடையும் காலக்கட்டத்திலும் நடிப்பில் வித்தியாசப்படுத்தி சிறப்பான பங்களிப்பை படத்துக்கு அளித்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் தீபிக்ஷா, மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் கதைக்கேற்றபடி இயல்பாக நடித்திருக்கின்றனர் .
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மதுமிதாவும், விரிவுரையாளராக நடித்திருக்கும் சாம்ஸும் சில காட்சிகளில் சிரிக்க வைக்க முயல்கின்றனர். ஆனால் நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை .
பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான்.
செல்லக்குட்டி அதீத இனிப்பு கொண்ட வெல்லக்கட்டி இல்லை என்றாலும் அளவான இனிப்பு சுவை கொண்டதுதான்.
