![]()

விடாமுயற்சி – விமர்சனம்
அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசண்டாரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் படம் விடா முயற்சி.
அஜர் பைஜான் நாட்டு தலைநகர் வாக்குவில் தன் மனைவி த்ரிஷாவுடன் வாழ்ந்து வருகிறார் அர்ஜுன். திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சில மனஸ்தாபங்கள் காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார் த்ரிஷா.
விவாகரத்து கிடைக்கும்வரை தன் பிறந்த வீட்டில் இருக்க நினைக்கும் நிஷாவை அஜித்தே காரில் அழைத்துச் சென்று விடப் போகிறார்.
அதிக போக்குவரத்தோ ஆள் நடமாட்டமோ இல்லாத நெடிய பாதையில் அஜித் திரிஷா செல்லும் கார் பழுதாகி நின்றுவிட, அப்போது கன்டெய்னர் லாரியில் அங்கு வரும் அர்ஜுனும் அவரது மனைவி ரெஜினாக கசண்ட்ராவும் உதவ முன் வருகிறார்கள்.
சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ரெஸ்டாரண்டில் த்ரிஷாவை விட்டு விடுவதாகவும், அதற்குள் அஜித் காரை ரிப்பேர் செய்து எடுத்து அங்கே வந்து த்ரிஷாவை அழைத்துச் செல்லலாம் என்று கூற, அஜித் அதற்கு உடன்படுகிறார்.
காரை சரி செய்த பிறகு அஜித் அந்த ரெஸ்டாரன்ட் சென்றால் திரிஷா அங்கே இல்லை. தன் மனைவியை குறித்து விசாரிக்கும் போது எங்கோ தவறு நடந்து இருக்கிறது அஜித்துக்கு தெரிய வருகிறது.
த்ரிஷா எங்கு போனார்? என்ன ஆனார்? மீண்டும் அவர் கிடைத்தாரா என்பதை பரபரப்பு திரில்லராக விவரிக்கிறது விடாமுயற்சி.
எந்த ஒரு மாஸ் ஹீரோவும் ஏற்கத் தயங்கும் அழுத்தமான வேடத்தை அஜித் துணிச்சலாக ஏற்று தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையாகவும் ஸ்டைலாகவும் வரும் அஜித்தை பார்த்து ரசிப்பது அவரது ரசிகர்களுக்கு செமையான விருந்தாக இருக்கும். குறிப்பாக துவக்காட்சிகளில் த்ரிஷாவை சந்திக்க கோட் சூட் அணிந்து வரும் அஜித் போடும் நடை செமை அசத்தல்.
காணாமல் போன தன் மனைவி த்ரிஷாவை பற்றி அஜித் விசாரிக்க விசாரிக்க சஸ்பென்ஸ் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. என்னதான் நடந்திருக்கும் என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கும் தொற்றிக் கொள்ளும்படியாக நேர்த்தியான திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டும் அஜித் பிரிவு குறித்து த்ரிஷாவுடன் விவாதிக்கும்போது உடைந்த குரலில் பேசும் வசனங்கள் நெகிழ வைக்கின்றன.
நடிப்பை பொறுத்தவரை த்ரிஷாவை விட ரெஜினா கசண்ட்ராவுக்கு வாய்ப்பு அதிகம். அதை அவர் மிகச் சரியாக பயன்படுத்திக்கொண் டு ஸ்கோர் செய்திருக்கிறார்.
கார் துரத்தல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் பணி பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக துவக்கத்தில் படு வேகமாக வரும் கார் மற்றொரு காருடன் மோதாமல் சுழன்று சுற்றி அடித்து நிற்கும் காட்சியை சொல்லலாம்.
அனிருத்தின் பின்னணி இசை அனாவசிய இரைச்சல் இன்றி சரியான முறையில் அமைந்து படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ரெஜினாமற்றும் அர்ஜூன் இருவரும் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்லப்படும் பிளாஷ்பேக் கதை படத்துடன் சற்றும் ஒட்டாதது மட்டுமின்றி நம்ப முடியாததாகவும் இருக்கிறது.
வழக்கமான மசாலா படங்களை பார்த்து சலித்தவர்களுக்கு மாறுபட்ட கதைக்களம் மற்றும் வித்தியாசமான படப்பிடிப்பு தளங்களில் உருவாக்கப்பட்ட விடா முயற்சி ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.5
