![]()

டோர் _ விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்க வந்திருக்கும் பாவனா டோர் படத்தின் மூலம் மிகச் சிறந்த கம் பேக் கொடுத்திருக்கிறார்.
நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள அழுத்தமான பாத்திரம் என்பதால் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார் பாவனா.
கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்காக பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் போது, அதில் உள்ள கோவிலையும் அகற்ற நேரிடுகிறது.
இதைத்தொடர்ந்து மதுரையில் வசிக்கும் பாவனாவின் தந்தை பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைகிறார். அந்த கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திலும் தொடர் மரணங்கள் ஏற்படுகின்றன.
பாவனாவும் அவரது தோழியும் தங்கியிருக்கும் வீட்டிலும் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.
பாவனாவின் தோழி காரணமே இல்லாமல், திடீரென்று சுவரில் தன் நெற்றியை மோதிக்கொண்டு காயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் பாவனாவும் அந்த அமானுஷ்யத்தை உணர்கிறார்.
பாவனாவுக்கு உதவ அவரது மீடியா தோழியும், தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் ஆய்வாளர் கணேஷ் வெங்கட்ராமனும் முன் வருகிறார்கள்.
கட்டுமான பணிகள் நடக்கும் அந்த வீடு யாரிடமிருந்து யாருக்கு கை மாறியது? அதில் உள்ள கோயிலின் பின்னணி என்ன? போன்ற மர்ம முடிச்சுகள் பின் பகுதியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுகின்றன.
மொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தன் தோளில் தாங்கிப் பிடிக்கிறார் பாவனா.
கணேஷ் வெங்கட்ராம், ஜெயபிரகாஷ், பாவனாவின் தோழியாக வரும் சிந்துரி ஆகியோரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர். அமானுஷ்ய சக்திகளை ஆராய்ச்சி செய்பவராக வரும் ரமேஷ் ஆறுமுகம் ஆவிகள் குறித்து “அளந்து” விடுவதெல்லாம் நம்பும்படி இல்லை.
ஆவி பேய் என்றெல்லாம் செல்லும் கதையில் இசையும் ஒளிப்பதிவும் வலுவாக அமைய வேண்டும். அந்த வகையில் டோர் படத்துக்கு ஒளிப்பதிவாளர் கௌதம் பலம் சேர்த்து இருக்கிறார். இசையமைப்பாளர் வருண் உண்ணியின் பின்னணிசையும் அமானுஷ்ய படங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்து பார்வையாளர்களை சரியான மீட்டரில் பயமுறுத்துகின்றன. அமானுஷ்ய உருவங்களும் ஆவி உடல்களும் திரையில் தோன்றும் காட்சியில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வெகு சிறப்பாகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெய்தேவ்.
திகில் பட ரசிகர்களை மட்டுமல்ல எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் டோர் படத்தை அனைவரும் தாராளமாக கண்டு ரசிக்கலாம்.
மதிப்பெண் 3.5/5

