![]()

வீர தீர சூரன் 2விமர்சனம்
ஒரு நல்ல திரைப்படம் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை தன்னுள் இழுத்துக்கொண்டு படத்தின் கடைசி காட்சி வரை ஒன்ற வைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் பார்த்தால் வீரதீர சூரன் பார்வையாளர்களை கட்டிப்போட்டு படம் பார்க்க வைத்திருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரியவர் என்றழைக்கப்படும் மாருதி பிரகாஷ் ராஜும், அவரது மகன் சூரஜ் வெஞ்சரமூடும் மதுரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தாதாவாக வலம் வருகின்றனர்.
அந்த ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் அதிகாரி எஸ் ஜே சூர்யா இருவரையும் என்கவுண்டரில் போட்டு தள்ள திட்டமிடுகிறார்.
அதற்கேற்றவகையில் சந்தர்ப்பம் ஒன்றும் அமைகிறது.
இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பழைய விசுவாசி விக்ரம் உதவியை நாடுகின்றனர்.
தற்போது அடிதடி வம்புகளுக்கெல்லாம் போகாத விக்ரம் மளிகை கடை ஒன்றை நடத்திக் கொண்டு, மனைவி மக்களுடன் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் பெரியவரின் கோரிக்கையை ஏற்க மறுத்தாலும் வேறு வழியின்றி ஒத்துக் கொள்கிறார் விக்ரம்.
பிறகு என்ன விக்ரமின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகிறது… எதிரிகளை எதிர் கொள்ளும் போது அப்படி ஒரு ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சீயான் விக்ரம். வெறித்தனமான நடிப்பு என்றால் மிகை இல்லை.
அதேசமயம் மனைவியிடம் காட்டும் காதலும், குழந்தைகளுடன் காட்டும் பிரியமும் வேறு லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.
மனைவி குழந்தையை காப்பாற்றுவதற்காக எந்த எல்லை வரை போவதற்கும் தயாராக இருக்கும் ஒருவரை தன் அற்புதமான நடிப்பில் அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் விக்ரம்.
துஷாரா விஜயனும் விக்ரமுக்கு ஈடு கொடுத்து முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்றும் பாலாஜி ரமேஷ் இந்திரா பாலா பார்வதி ஸ்ரீஜா ரவி ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நிறைவாகவே செய்து இருக்கின்றனர்.
விக்ரம் வேஷ்டியை மடித்து கட்டுவதற்கு முன்பு ஓர் உதறு உதறுகிறாரே அட்டகாசமான மேனரிசம். திரையரங்குகளில் விசில் பறக்கிறது.
தன் மகனை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கும் மாருதி பிரகாஷ் ராஜின் நடிப்பும் சிறப்பு.
பெரும் பகுதி காட்சிகள் இரவிலேயே நடக்கின்றன. அளவான ஒளியையும் அடர்த்தியான இருளையும் சரியான முறையில் கலந்து படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவு படத்தை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்கிறது என்று தாராளமாக சொல்லலாம். அதேபோல் ஜிவி பிரகாஷ் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.
பெரியவர் தனக்காக வேலை செய்யும்படி விக்ரமை பணிப்பதும், பெரியவர் கொலை செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி தனக்காக வேலை செய்யும்படி விக்ரமை நிர்பந்திப்பதும், விக்ரம் என்ன செய்யப் போகிறார் என்பதும் படத்தின் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டே போகிறது. அட்டகாசமான ஆக்சன் கதையில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை அழகாக இணைத்து விறுவிறுப்பான படத்தை கொடுத்த இயக்குனர் எஸ் யு செந்தில்குமார் பாராட்டுக்குரியவர்.
ஆக்சன் பட ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம் வீரதீர சூரன்.
மதிப்பெண் 4/ 5

