Tuesday, September 15

ஹிட் 3 _ விமர்சனம்

Loading

ஹிட் 3 _ விமர்சனம்

போலீஸ் அதிகாரியான நானி கொடூரமாக ஒரு கொலை செய்வதுடன் அதை வீடியோவாகவும் எடுக்கிறார் என்று ஹிட் படம் துவங்கும் போது ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்து வந்து விடுகிறது.

அடுத்ததாக மீண்டும் ஒரு கொலையை இதே பாணியில் நானி செய்யும்போது அதை மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி பார்த்து விடுகிறார்.

இப்படி தொடர்ந்து வரும் பரபரப்பான காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை மேலும் மேலும் கூட்டுகின்றன.  இந்த இரண்டு கொலைகளையும் நான் ஏன் செய்தார் என்று தெரிய வரும்போது அதிர்ச்சியும் பரபரப்பும் இன்னும் அதிகரிக்கிறது.

பிளாக் வேர்ல்ட் எனப்படும் கருப்பு உலகத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர்கலை கூண்டோடு பிடிக்கவே நானி இந்தக் கொலைகளை செய்து அவர்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்.

பின்னர் அந்தக் குழுவுக்குள் நுழைகிறார். பிளாக் வேர்ல்ட் சீரியல் கில்லர்களின் தலைவன் நானி போலீஸ் அதிகாரி என்பதை கண்டுபிடித்தானா?  நானிக்கும் சீரியல் கில்லர் குழுவுக்கும் நடக்கும் போராட்டத்தின் முடிவு என்ன என்பது படத்தின் பின்பகுதி.

ஒன் மேன் ஆர்மியாக அதிரடி காட்டி அட்டகாசம் செய்திருக்கிறார் நானி. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அழகுப் பதுமை ஸ்ரீநிதி ஷெட்டி கொடுத்த வேடத்தை குறைவின்றி நிறைவாகவே செய்திருக்கிறார். சமுத்திரக்கனிக்கு தான் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் சனு ஜான் வர்கிசின் ஒளிப்பதிவு .இரவு நேர காட்சிகளை கூட கண்ணுக்கு இதம் அளிக்கும் அழகான ஓவியம்போல் படம் பிடித்து இருக்கும் சனு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு படத்தை வேறு உயரத்துக்கு எடுத்துச் செல்கிறது.

காஷ்மீர், பீகார், அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருக்கின்றன.  நிக்கி ஜே மேயரின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

ரத்தம் தெக்கும் அதீத வன்முறை காட்சிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.

மாறுபட்ட களத்தில், பலமான கதைக்கு, விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து  படத்தை இயக்கிய சைலேஷ் கோலனுக்கு தனி பாராட்டு.

மதிப்பெண் 3.5/5