Wednesday, September 23

ஜின் _ விமர்சனம்

Loading

ஜின் _ விமர்சனம்

The pet என்ற டேக் லைனுடன் வந்திருக்கும் ஜின் திரைப்படம் வழக்கமான பேய் பிளஸ் காமெடி கதைதான்.
என்ன ஒரு வித்தியாசம் என்றால் இந்த பேயை ஒரு வளர்ப்பு பிராணி போல் பெட்டிக்குள் அடைத்து வைத்திருப்பதும், அது பாலும் பிஸ்கட்டும் சாப்பிடுவதும் தான். மலேசியாவில் இசை கலைஞராக பணியாற்றும் முகேன், பரிசுப் பொருள்கள் வாங்குவதற்காக அங்குள்ள ஒரு கடைக்கு செல்கிறார்.
அப்போது வித்தியாசமான பெட்டி ஒன்றில் இருக்கும் ஜின் என்ற செல்லப்பிராணி குறித்து தகவல் தெரியவர, ஆர்வத்துடன் அதை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
தமிழ்நாட்டில் அவர் சந்திக்கும் பவ்யா உடன் காதல் ஏற்படுகிறது. மேலும் லாட்டரியில் பெரிய தொகை ஒன்றும் பரிசாக கிடைக்கிறது.
இதற்கெல்லாம் காரணம், தான் கொண்டு வந்த ஜின் என்று நினைக்கிறார் முகேன்.
ஆனால் தொடர்ந்து ஏற்படும் சில அசம்பாவிதங்களால் ஜின் அதிர்ஷ்டம் இல்லாதது என்றும், அது வந்ததால்தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு நாள் பவ்யா பலத்த ரத்த காயங்களுடன் வீட்டில் கிடக்கிறார். இதற்கு மேலும் பொறுக்கமாட்டாத முகேன் குடும்பத்தார் அந்த ஜின் இருக்கும் பெட்டியை தூக்கி எறிகிறார்கள்.
மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளிக்கும் போது சிலர் அவரை கொலை செய்யவும் முயற்சிக்கிறார்கள்.
திவ்யாவை தாக்கி காயப்படுத்தியது யார்? அவரை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் என்பதுதான் படத்தின் பிற்பகுதி.
கதாநாயகன் முகேன் காதல் காட்சிகளில் கலகலப்பான நடிப்பையும், சண்டைக் காட்சிகளில் அதிரடியான ஆக்ஷனையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக வரும் அழகு மயில் பவ்யாவும் கவனம் ஈர்க்கிறார்.
பேய் கதைகளில் ஃப்ளாஷ் பேக் வரும். ஆனால் இந்த பேய்க்கே சரித்திர கால ஃப்ளாஷ் பிளாக் ஒன்று இருக்கிறது.
ராதாரவி, வடிவுக்கரசி, வினோதினி, இமான் அண்ணாச்சி, பால சரவணன் ஆகியோர் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர். அந்த காலத்தில் வந்த ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் ஜீபூம்பா என்ற கவர்ச்சிகரமான பேய் பலவிதத்திலும் கதாநாயகனுக்கு உதவி செய்யும். ‘பட்டணத்தில் பூதம்’ படத்தின் ஜீபூம்பாவை பார்க்க சகிக்காத கொடூரமான மேக்கப் போட்டு கதாநாயகனுக்கு உதவுவதாக இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார்கள். இந்த ஜிம் தொடர்பாகவே எக்கச்சக்கமான முரண்பாடுகள் படம் முழுக்கவே இருக்கிறது.
பேய் படம் எடுத்தால் எந்தவிதமான லாஜிக்கும் தேவை இல்லை என்று இயக்குனர் டி ஆர் பாலா நினைத்து விட்டார்போல் இருக்கிறது. ஜின் படத்தின் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜாவின் பணி ரசிக்கும்படி இருக்கிறது.
இசையமைப்பாளர் விவேக் மெர்வினும் தன் பங்களிப்பை குறைவின்றி செய்திருக்கிறார்.
கதைக்கும் திரைக்கதைக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் குழந்தைகளை கவரும் நல்லதொரு பொழுதுபோக்குப் படமாக ஜின் அமைந்திருக்கும்.