Tuesday, November 17

மிஸஸ் அண்ட் மிஸ்டர் _/விமர்சனம்

Loading

மிஸஸ் அண்ட் மிஸ்டர் _ விமர்சனம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வருகின்றனர் வனிதா ராபர்ட் தம்பதியர்.
40 வயதைக் கடந்து விட்ட நிலையில் வனிதாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ராபர்ட் .
திருமணமாகாத இளம் காதலர்களைப் போலவே இந்த ஜோடி பரஸ்பரம் அன்பு செலுத்தி கொண்டாட்டமாக தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது
இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அதை ஒரு குறையாகவே நினைக்காமல் அது பற்றிய கவலையே இல்லாமல் சந்தோஷமாகவே இந்தத் தம்பதியினர் வாழ்கின்றனர். ஆனால் மற்றவர்கள் இவர்களை குழந்தை பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை சொல்கின்றனர். இனியும் தாமதப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டால் அவ்வளவுதான்… என்று சுற்றிலும் உள்ளவர்கள் தூண்டி விடவே அம்மாவாகிய தீருவது என்ற முடிவுக்கு வருகிறார் வனிதா.
ஆனால் அவரது கணவர் ராபர்ட்டோ குழந்தையை வேண்டாம் என்று நினைக்கிறார்.
எனவே வனிதா சாம, தான, பேத தண்டம் என எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல் தன் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்குகிறார். வனிதாவின் கவர்ச்சிக்கெல்லாம் ராபர்ட் மசிவதாக இல்லை.
தாய்மை அடைந்தே தீருவது என்ற வனிதாவின் முயற்சி வெற்றி பெற்றதா?
எல்லா பெற்றோரும் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படும்போது ராபர்ட் மட்டும் குழந்தை வேண்டாம் என்று நினைப்பதற்கு என்ன காரணம் என்பது படத்தின் இரண்டாம் பாதியில் தெரிகிறது. வனிதா சொந்தமாக தயாரித்திருக்கும் இப்படத்தில் அவரே கதாநாயகி வேடமும் ஏற்று நடித்திருப்பதை துணிச்சல் என்று சொல்லலாம். ஆனால் அதைவிட துணிச்சல் இந்த வயதிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை பயமுறுத்தி இருப்பதுதான்.
மலையாள படங்களில் புகழ்பெற்ற (!) நடிகை சகிலா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷகிலாவின் கதாபாத்திரம் தெலுங்கை தாய் மொழியாக கொண்டது என்பதற்காக படம் முழுவதும் அவர் பேசும் தெலுங்கு எரிச்சல் ஊட்டுகிறது. “மம்மூட்டிக்கும் மோகன் லாலுக்குமே டஃப் கொடுத்தவர்” என்ற டயலாக் எல்லாம் வருகிறது.
தனது கவர்ச்சி போதாது என்று நினைத்தாரோ என்னவோ நடிகை கிரணையும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட வைத்திருக்கிறார் வனிதா.
பாத்திமா பாபு, ஸ்ரீமன் என்று பலரும் இந்தப் படத்தில் சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பல காட்சிகள் அநியாயத்திற்கு ஆபாசமாகவே அமைந்திருக்கிறது. 40 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள உடல் சிக்கல்களையும் உளவியல் சிக்கல்களையும் உணர்வுபூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் அலசி ஒரு நல்ல படத்தை பெண்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் வனிதா அதை தவறவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் பிளஸ் பாயிண்ட்டில் முக்கியமானது டி.ராஜபாண்டியின் அருமையான ஒளிப்பதிவுதான். பேங்காக்கில் படமாக்கப்பட்ட காட்சிகள் கண்ணுக்குக் குளுமையாக அமைந்திருக்கின்றன.
இந்தப் படத்துக்கு பிராயச்சித்தமாக அடுத்த படத்தையாவது ஓரளவுக்காவது தரமான படமாக இயக்க வேண்டும் வனிதா.