Tuesday, September 22

உசுரே _ விமர்சனம்

Loading

உசுரே _ விமர்சனம்

ஆந்திரா, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூரில் நடப்பதாக சித்தரிக்கப்படும் ‘உசுரே’ படத்தின் கதை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாயகன் டீஜய் அருணாசலம் வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு தன் தாய் மந்த்ராவுடன் குடி வருகிறார் நாயகி ஜனனி.

தன் மகளை யாராவது சாதாரணமாகப் பார்த்தாலே கன்னத்தில் ‘பளார்’ விடும் கண்டிப்பான தாயான மந்த்ராவை மீறி ஜனனியை காதலிக்கிறார் டீஜய்.

ஆரம்பத்தில் இந்தக் காதலை ஜனனி ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், டீஜய் தன்மீது கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான காதலைப் புரிந்து கொண்டு ஜனனியும் காதலிக்க தொடங்குகிறார்.

மகளின் காதல் மந்த்ராவுக்கு தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஆச்சரியங்களை மட்டுமல்ல பல அதிர்ச்சிகளையும் கொடுக்கிறது.

70 களிலும் 80 களிலும் வந்த திரைப்படங்களின் கதையைப் போல் சாதாரணமாக சென்று கொண்டிருந்த ‘உசுரே’ திரைப்படம், இரண்டாம் பாதியில் தீவிர வேகமெடுத்து மிக விறுவிறுப்பாக செல்கிறது.

இளம் நாயகனாக வரும் டீஜய் நடிப்பில் பாஸ் மார்க் பெறுகிறார்.

பிக் பாஸ் மூலம் புகழடைந்த ஜனனி கதாநாயகி வேடத்தில் கவனம் ஈர்க்கிறார்.

காதலன் எதிர் வீட்டில் இருந்தாலும் அம்மாவின் கண்டிப்பு காரணமாக அவருடன் சுமூகமாக பேசிப் பழக முடியாமல் தவிக்கும் இளம் பெண் வேடத்தில் ஜனனி சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன் கவர்ச்சி வேடங்களில் கலக்கிய மந்த்ரா கண்டிப்பு காட்டும் அம்மா வேடத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார்.

ஓரிரு காட்சிகளில் மிகச் சிறிய வேடங்களில் நடிக்கும் கிரேன் மனோகர் நாயகனின் தந்தையாக நெகிழ வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு.

எளிமையான கிராமத்து கதைக்கு ஏற்ற வகையில் இசையமைத்திருக்கிறார் கிரண் ஜோஸ்.

பாடல்களில் இவரது திறமை பளிச்சிடுகிறது. உசுரே பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய் அடக்கி வாசித்திருப்பதன் மூலம் கிராமத்து கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

படத்தை எழுதி இயக்கி இருப்பவர் நவீன் டி கோபால்.

இரண்டாம் பாதியின் பின்பகுதி, பார்வையாளர்கள் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி என்பதில் ஐயமில்லை.உசிரஎ

காதல் கதையை மாறுபட்ட கோணத்தில் சொல்ல முயன்ற ‘உசுரே’ படத்தை ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.