Thursday, October 29

வீர வணக்கம் _ விமர்சனம்

Loading

வீர வணக்கம் _ விமர்சனம்

கிராமத்தில் வசிக்கும் பரத்,  மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு, பரிதவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் துணையாக நிற்கிறார்.

இந்த எளிய மக்களுக்கு சரியான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அருகாமையில் உள்ள கேரளா மாநிலத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள கம்யூனிசப் போராளியும் பிரபல பாடகிமான பிகே மேதினி அம்மா அவர்களை சந்தித்து உரையாட வைக்கிறார்.

மிகக் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்த விதத்தை,  பி.கே. மேதினி அம்மா விவரிக்க, அது கதையாக திரையில் மலர்கிறது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய புரட்சி வீரரான பிகே கிருஷ்ணபிள்ளையின் தலைமறைவு வாழ்க்கை நெஞ்சைத் தொடும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுக்க சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தபோது கேரளாவில் நிலக்கிழார்கள்,  ஏழை மக்களை எப்படி கொத்தடிமைகளாக பயன்படுத்தி சுரண்டி வந்தார்கள் என்பதையும் நெஞ்சை தொடும் வகையில் படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.

பி கிருஷ்ணபிள்ளையின் பாத்திரத்தில் சமுத்திரகனி கச்சிதமாக பொருந்துகிறார்.கம்யூனிஸ போராளியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

பரத்தின் கம்பீரமான தோற்றமும், உடல் மொழியும் அவர் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர் ஊட்டுகிறது.

மற்றும் ரித்தீஷ், சுரபி லட்சுமி, பரணி, ஐஸ்விகா, சித்திக், சாதனா ரமேஷ் ஆகியோரும் ஏற்று இருப்பது சிறிய வேடங்கள் என்றாலும் அதில் திறம்பட நடித்திருக்கின்றனர்.

கவியரசுவின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக அமைந்து அடுத்த உயரத்திற்கு படத்தை  எடுத்துச் செல்கிறது.

கருத்தாழமிக்க பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.

போலீஸ் தேடி வரும் போது தோழரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குளத்தில் குளிப்பது போல் நடித்து, துணியை போட்டு அவரை மறைக்கும் காட்சி நெஞ்சில் நிறைகிறது.

விவரணப் படங்களுக்கு உரிய விஷயங்களே இருந்தாலும் அதை சுவையான ஒரு கதைப்படமாக உருவாக்கிய இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் அவர்களை தாராளமாக பாராட்டலாம்.