Saturday, September 26

கடுக்கா _ விமர்சனம்

Loading

கடுக்கா _ விமர்சனம்

கொங்கு பகுதியில் உள்ள கிராமம்தான் கதைக்களம். அங்கு வசிக்கும் எளிய மனிதர்கள் தான் படத்தின் பாத்திரங்கள்.

உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் நீட்டாக உடை உடுத்திக் கொண்டு வேலைக்கு செல்வது போல் புறப்பட்டு சென்று, பஸ் ஸ்டாப்பில் நின்று பெண்களை சைட் அடிப்பதையே வேலையாக கொண்டு இருக்கிறார் நாயகன் விஜய் கௌரிஷ்.

இந்த சூழலில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு புதிதாக குடி வருகிறார் நாயகி ஸ்மேகா. 

ஸ்மேகாவிடம் கௌரிஷ் தன் காதல் வலையை வீச, வேண்டா வெறுப்பாக அவரும் நாயகனை காதலிக்க தொடங்குகிறார்.

அத்துடன் வேலைக்கு போய் சம்பாதிக்கும்படி அறிவுரையும் சொல்கிறார்.

சுவர் விளம்பரம் எழுதும் வேலையை செய்து வரும் கௌரிஷின்  நண்பன் ஆதர்ஷும் நாயகியை காதலிப்பதாக சொல்ல, அவருக்கும் காதலில் ஓகே சொல்கிறார் நாயகி.

இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனி வேலைக்கு செல்கின்றனர்.

ஒரு நாள் தாங்கள் இருவரும் காதலிப்பது ஒரே பெண்ணைத்தான் என்ற உண்மை இருவருக்குமே தெரிய வருகிறது.

ஒரு காதல் கடிதம் எழுதி அதை  பிரதி எடுத்து இரண்டு பேருக்குமே கொடுத்திருக்கிறார்  நாயகி ஸ்மேகா.

  உண்மையில் நாயகி யாரைக் காதலிக்கிறார்? இரண்டு பேரையும் காதலிப்பதாக கடிதம் கொடுத்த காரணம் என்ன?

கிராமப் பகுதிகளில் ஏமாற்றுவதை கடுக்கா கொடுப்பது என்று சொல்வார்கள். நாயகி இரண்டு பேரையும் காதலிப்பதால் சொல்லி ஏன் கடுக்கா கொடுக்கிறார்
என்பதுதான் கடுக்கா படம்.

பெண்களை போகப் பொருளாக பார்க்கும் ஆண் வர்க்கத்திற்கு சாட்டை எடுத்து சவுக்கடி கொடுப்பது போல் அல்லாமல், ஊசி குத்துவது போல் மிருதுவாக தன் வசனங்களில் சிந்தனையை கிளறுகிறார் வசனகர்த்தா எஸ் எஸ் முருகராசு.

படத்தின் கதை வசனத்துடன் இயக்குனர் பொறுப்பை ஏற்று இருப்பதும் இவரே.

தாராளமாக இவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.

ஒரு திரைப்படத்தை பார்த்தது போல் அல்லாமல் கண்முன் நடக்கும் சம்பவங்களை பார்ப்பது போல் இருப்பதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

மிகையான அலங்காரங்கள் இன்றி கிராமத்தை உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தி இருப்பது ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் துரைக்கண்ணுவின் திறமைக்கு சான்று.

கெவின் டிகாஸ்ட் இசையில் உருவான ‘அய்யய்யோ….’பாடல் படம் பார்த்தவர்களை திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப் பாடலை எழுதிய நிலவை பார்த்திபன் வார்த்தைகளும் வலிமையாகவே அமர்ந்திருக்கின்றன.

நாயகனின் தாயாராக வரும் பாத்திரம், நாயகியின் தந்தையாக வரும் வேடமும் என்றென்றும் மறக்க முடியாதவை.

காதலி கிடைக்காத சோகத்தில் கயிறை எடுத்து தூக்கு மாட்டிக்கொள்ளும் நாயகனை தடுத்து நிறுத்தி, பக்கத்து வீட்டு பெண் பேசும் வசனம் வயிறு வலிக்க சிரிப்பை வரவழைக்கும்.

அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவர்களை படத்தின் கடைசி காட்சி சிந்திக்கவும் செய்யும்.

சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் இந்த படத்தை தாராளமாக எல்லோரும் கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண்4/5