Friday, May 1

திவ்யா _ விமர்சனம்

Loading

திவ்யா விமர்சனம்

ஆணவக் கொலை குறித்து வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் திவ்யா.

பட்டியலினத்தை சேர்ந்த நாயகன் ஆர் ஜே பி., தன் தாத்தா மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

கல்லூரியில் படித்து வரும் இவர், பகுதி நேர வேலையாக பறை அடிக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.

நாயகன் படிக்கும் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டுக்கு வந்து சேர்ந்த நாயகி கேத்தி, நாயகன் அண்ட் கோவால் ‘ரேக்’ செய்யப்பட்டாலும், பின்னர் நாயகனின் குடும்பப் பின்னணி அறிந்து அவனிடம் ஈடுபாடு கொள்கிறாள்.

பேச்சு வாக்கில் “நீ சிரிப்பது என் அம்மா சிரிப்பது போல் இருக்கிறது…” என்று ஆர் ஜே பி சொல்ல, நெஞ்சம் நெகிழ்கிறார் நாயகி.

தன் காதலன் ஆர் ஜே பி படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் மட்டுமே அவரது குடும்பம் முன்னேறும் என்பதை நன்கு உணர்ந்த நாயகி அவ்வப்போது அந்த பொறுப்புகளை அவனுக்கு நினைவூட்டியும் வருகிறார்.

இந்த சூழலில் நாயகியின் காதல்  பெற்றோருக்கு தெரிய வர, தீவிரமாக மாப்பிள்ளை தேடி உடனடியாக திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர்.

காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க நாயகனின் நண்பர்கள் முயற்சிக்க, நாயகியின் உறவினர்களோ ஜாதி வெறி என்ற தீயில் எண்ணை ஊற்றிவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள்.

இறுதியில் காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் திவ்யாவின் இறுதிப் பகுதி.

படத்தை எழுதி, இயக்கி,  கதாநாயகனாகவும் நடித்து இருப்பவர் ஆர் ஜே பி.
நல்ல கதை கருவை தேர்ந்தெடுத்த இயக்குனர் என்ன காரணத்தாலோ அதற்கு அழுத்தமான திரைக்கதை அமைக்க தவறிவிட்டார்.

நடிப்பைப் பொருத்தவரை நாயகன் ஆர் ஜே பி மற்றும் நாயகி திவ்யாவாக நடித்திருக்கும் கீர்த்தி ஆகியோர் நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

பல காட்சிகளில் வசனங்களும் வாயசைவும் ஒத்துப் போகாமல் இருப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

இன்னும் அதிக சிரத்தையோடு உருவாக்கப்பட்டு இருந்தால் தரமான கலைப் படமாக உருவாகி இருப்பாள் இந்த திவ்யா.