Thursday, October 29

கோடியில் ஒருவன் – விமர்சனம்

Loading

ஊழல் செய்யும் உள்ளூர் அரசியல்வாதியால் பாதிக்கப்படும் விஜய் ஆண்டனியின் தாயார், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைப்பதற்காகவே கலெக்டராக வேண்டும் என்று சொல்லி தன் மகனை வளர்த்து வருகிறார். இதற்காக சென்னை வரும் விஜய் ஆண்டனி, படித்துக்கொண்டே தான் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளி இடை நின்ற மாணவர்களுக்காக ட்யூஷன் எடுக்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் விஜய் ஆண்டனி, நேர்முகத் தேர்வுக்காக டில்லி புறப்படும்போது ஊழல் அரசியல்வாதி ஆதரவுடன் சமூக விரோத காரியங்களில் ஈடுபடும் ஆட்கள் அவரைத் தாக்கி டில்லி செல்ல விடாமல் தடுக்கின்றனர்.

கலெக்டராகும் கனவு தகர்ந்தாலும், ஊழல் அரசியல்வாதிகளை எவ்வாறு எதிர்கொண்டு தன் லட்சியத்தை நிறைவேற்றுகிறார் என்பதை சுவைபடவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் படம்தான் கோடியில் ஓருவன்.

வழக்கமாக இவ்வகைப் படங்களில் ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும் வகையில் தனிமனித சாகத்தில் காட்சிகள் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கோடியில் ஒருவன் படத்தில் அவ்வாறு இல்லாமல் மாற்றத்துக்கு மக்களை தயார் செய்யும் வகையில் காட்சிகள் அமைத்ததற்காக இயக்குநர் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சபாஷ் சொல்லி பாராட்டலாம்.
கதாநாயகியாக வரும் ஆத்மிகாவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். எழுத்துத் தேர்வில் விஜய் ஆண்டனி வெற்றி பெற்றதை மெசேஜ் மூலமாக கண்கலங்க அவரிடம் தெரிவிப்பதும், கண்கள் பனிக்க விஜய் ஆண்டனி அதை எதிர்கொள்வதும் ரசமான காட்சி.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் உருவான நான் வருவேன் பாடல் மனதில் பதிந்து முணுமுணுக்க வைக்கிறது.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்த விஜய் ஆண்டனி முதல் முறையாக கோடியில் ஒருவன் படத்துக்கு படத்தொகுப்பும் செய்திருக்கிறார். துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வின்றி காட்சிகளை தொகுத்திருப்பது சிறப்பு. ஆத்மிகாவிடம் தன் ப்ளாஷ் பேக்கை சொல்ல ஆரம்பிக்கும்போது வில்லனின் கைத்தடிகளின் ரசிக்கத்தக்க காமெடி ஒன்றை போட்டு பின்னர் ப்ளாஷ் பேக்கை முடிப்பது சிறப்பு.

என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக குடிசை மாற்று அடுக்கங்களை பருந்துப் பார்வையில் படமாக்கியிருப்பது வெகு சிறப்பு.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதைக் களத்தையும் வித்தியாசமாக இருக்கும்படி தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனியை நம்பி அவரது படத்தைப் பார்க்கப் போகலாம் என்ற கருத்தை இந்தப் படத்திலும் உறுதிப் படுத்தியிருக்கிறார். அடிதடி சண்டைக் காட்சிகளிலும் அசத்தலாக நடித்து மாஸ் ஹீரோவாகியிருக்கிறார் வி.ஆ.

ஊராட்சி பெண் தலைவர்களை கைப்பாவையாக்கி மற்றவர்கள் எப்படி நிழல் தலைவர்களாக நிர்வாகம் செய்ய ஆரம்பிக்கிறார்கள் எனபதை ஆரம்ப காட்சியில் தொட்டுக் காட்டும் கோடியில் ஒருவன், தொடர்ந்து, மக்கள் நலப் பணிகளுக்கு ஒதுக்கும் பணம் யார் யாருக்கு எவ்வளவு கட்டிங் செல்கிறது என்பதையும் துணிச்சலுடன் விலாவாரியாக விவரிக்கிறது. ஊராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படம் வெளியாகியிருப்பதால் மேலும் கவனம் பெறுகிறது.

சிந்திக்கத் தக்க நல்ல கருத்துக்களை வெகுஜன ரசனையில் சேர்த்து கொடுத்திருப்பது சிறப்பு.

கோடியில் ஒருவன் 3.5/ 5