Thursday, November 12

உடன்பிறப்பே – விமர்சனம்

Loading

2டி என்டர்டெயிண்ட்மெண்ட் வழங்க ஜோதிகா சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் ஐம்பதாவது படமாக வெளியாகியிருகிறது உடன் பிறப்பே.

படத்தின் டைட்டிலில் தயாரிப்பு சூர்யா ஜோதிகா என்று போடாமல் ஜோதிகா சூர்யா என்று போட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்.

அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை எத்தனை படங்களில் பார்த்தாலும் அலுக்காது. இந்த முறை உடன் பிறப்பே படத்தில் சசிகுமாரும் ஜோதிகாவும் பாசக்கார அண்ணன் தங்கையாக வாழ்ந்து நம் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார்கள்.

“சாமியே தப்பு செய்தாலும் சட்டையைப் பிடிச்சு கேட்கணும்” என்று என்று ஆக்ரோஷமாக களம் இறங்கும் வேடத்தில் சசிகுமார், “சர்பத் குடிச்சாலும் சட்டப்படி குடிக்கணும்” என்று சாத்வீக வழியில் இயங்கும் சமுத்திரகனி, முன்னவரின் தங்கையாகப் பிறந்து வளர்ந்து பின்னவரின் மனைவியாக வாழும் ஜோதிகா என மூன்று பிரதான பாத்திரங்களை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் அருமையான கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.

“ஜாதிகள் இல்லயடி பாப்பா…” என்ற பாரதியாரின் பாடலையே “ஜாதிகள் இல்லை அடி பாப்பா…” என சொல்லி ஜாதி பெருமை பேசி குழப்பம் ஏற்படுத்துபவர்களை புரட்டி எடுக்கும் வேடத்தில் ஆக்ரோஷம் காட்டுகிறார் சசிகுமார்.

ஜோதிகாவை மணம் செய்து கொடுத்த கையோடு, வீட்டு மாப்பிள்ளையாக தங்கள் வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்று சசிகுமார் கேட்டதும் மறு பேச்சு பேசாமல் ஒத்துக்கொண்டு செல்லும் சமுத்திரகனி, பின்னர் சசிகுமாரிடம் சுத்தமாக பேச்சு வார்த்தையை நிறுத்தி விலகிச் செல்வதற்கு சொல்லப்படும் ப்ளாஷ் பேக் கதை வலுவாகத்தான் இருக்கிறது.

ஆனால் இறுதியில் சசிகுமாருடன் சமரசமாகி அவருடன் இணைவதற்கு சொல்லப்படும் கதைதான் அவ்வளவு வலுவாக இல்லை.

மறு பிரவேசத்தில் கனமான பாத்திரங்களாகத் தேர்வு செய்து நடிக்கும் ஜோதிகா உடன் பிறப்பே படத்தில் மொத்த படத்தையும் தன் மீது தாங்கி சுமப்பதுடன், முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Friend like brother; brother like friend என்று சொல்வதுபோல் அருமையான வேடத்தில் வரும் சூரி மனதில் நிற்கிறார். குறிப்பாக சாப்பிட ஜோதிகா வீட்டுக்குச் செல்லும்போது போலீஸ் பிடிக்கும்போது அவர் பேசம் வசனங்கள் பிரமாதம். நகைச்சுவை வேடம் மட்டுமல்ல, குணசித்ர வேடங்களிலும் தன்னால் சோபிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சூரி.

வேளாண்மை தொடர்பான செய்திகளை சமீபகாலமாக வசனங்களில் திணிக்கும் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில் காட்சிக்கு பொருத்தமான இடத்தில் கதையோட்டத்திலேயே வரும் வேளாண்மை தொடர்பான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

“விவசாயம் பண்றதாலேதான் உனக்கு ட்ராக்டர் விற்குது. நீ ட்ராக்டர் விற்பதால் யாரும் விவசாயம் பண்ணவில்லை…..”  “தண்ணீரை தரையில் தேடாதீர்கள்….வானத்தில் தேடுங்கள்.. .”போன்ற வசனங்களும், ஆழ்துளைக் கிணறு ஆபத்துகளை காட்சிப்படுதியிருக்கும் விதமும் சிறப்பு.

இமானின் இசையில் யுகபாரதி , சினேகன் வரிகளில் அண்ணே என் அண்ணே , ஒத்தைப்பனை காட்டேரி பாடல்கள் மனதை தொடுகின்றன.

வேல்ராஜின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

குடும்பத்துடன் காண வேண்டிய தரமான படம் உடன்பிறப்பே

(ரேட்டிங் 3.5/5)