![]()
ரைட்டர் – விமர்சனம்
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராகப் பணி செய்து ஓய்வு பெறும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி, காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு மேலதிகாரிகளின் கோபத்தையும் வெறுப்பையும் தேடிக்கொண்டதால், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அப்பாவி ஒருவனை குற்றவாளியாக்கும் முயற்சியில் திருமண மண்டபத்திலும், மேன்ஷனில் தங்க வைக்கப்பட, அவனை பாதுகாக்க வேண்டிய பாரா பணி அவருக்குத் தரப்படுகிறது.
அந்த அப்பாவி இளைஞனை இணை ஆணையர் என்ன குற்றத்தில் சிக்க வைக்க முயல்கிறார்… அதற்கு காரணம் என்ன… தெரிந்தோ தெரியாமலோ இந்த பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் சமுத்திரகனி அதிலிருந்து மீண்டாரா இல்லையா? என்பதே ரைட்டர் படத்தின் கதை.
பேச்சைக் குறைத்து, அடக்கி வாசித்து மிக யதார்த்தமான நடிப்பால் நெஞ்சைத் தொடுகிறார் சமுத்திரகனி. கனிக்கு இணையாக கவனத்தை ஈர்க்கும் மற்றொரு பாத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலை படத்தின் நாயகன் அந்தோணி. இறுக்கமாகச் செல்லும் கதையோட்டத்தில் காவல்துறை நடைமுறைகளை அட்டகாசமான வசனங்களால் அருமையாக பகடி செய்திருக்கிறார்.
குதிரைப்படை காவலராக விரும்பும் கனவுடன் இருக்கும் இனியாவின் நியாயமான ஆசை ஜாதியின் காரணமாக கருகிப்போவது நெகிழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது.
தம்பியை போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்ற முயலும் அண்ணன் வேடத்தில் அருமையாக நடித்திருக்கும் இயக்குநர் சுப்ரமணிய சிவா, நல்ல குணசித்ர நடிகர் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.
வக்கீலாக வந்து காவலர்களிடம் கெத்து காட்டும் ஜி.எம்.சுந்தர், ஆய்வாளராக வரும் கவிதா பாரதி, இணை ஆணையராக கடுமை காட்டும் கவின் ஜெய்பாபு மற்றும் சின்னச் சின்ன வேடங்களில் வருபவர்கள்கூட நினைவில் நிற்கும் அளவுக்கு காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
பிரதீப்காளிராஜா ஒளிப்பதிவு நேரில் சம்பவங்களைப் பார்ப்பதுபோல் நேர்த்தியாக படமாக்கப்படிருக்கிறது.
கோவிந்த்வசந்தாவின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ராமாயணத்தில் எத்தனை முறை ராமர் பெயர் வருகிறது என்று ஆய்வு செய்து கொடுத்தாலே டாக்டர் பட்டம் வாங்கிடக்கூடிய சூழல் இருக்கும்போது காவல்துறையில் நடக்கும் தற்கொலைகளை ஆய்வு செய்யும் மாணவன் புலனாய்வு பத்திரிகையாளரைப்போல் என்ன பெரிதாகக் கண்டுபிடித்துவிடப்போகிறான் என்று இணை ஆணையர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் யோசிக்காமலா அவனை தீவிரவாதியாக சித்தரித்து சிறையில் தள்ள நினைப்பார் என்ற கேள்வி எழுகிறதே…
தகவல் உரிமை அறியும் சட்டத்தில் போலீஸ் ரெக்கார்ட்படி இனியா தற்கொலை செய்து கொண்டார் என்பதை மீறி அவர் என்ன தெரிந்து கொள்ளவிட முடியும். இதை இணை ஆணையர் யோசிக்காவிட்டாலும் இயக்குநர் யோசித்திருக்க வேண்டாமா….
இந்த அடிப்படையில் பார்த்தால் பில்டிங் ஸ்ட்ராங்தான்….ஆனால் பேஸ்மெண்ட் வீக்.
இதுவரை சொல்லப்படதா காவலர் கதை என்ற வகையிலும், அதற்கேற்ப வலுவான காட்சிகள் மூலம் திரைக்கதையை கட்டமைத்த வகையிலும் எழுதி இயக்கிய பிராங்க்ளின் ஜேக்கப் பாராட்டுக்குரிய நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
தரமான படங்களை மட்டுமே தொடர்ந்து உருவாக்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் என்றால் தாரளமாக திரையரங்குக்குள் நுழையலாம் என்ற எண்ணத்தை ரைட்டர் படத்திலும் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

