Friday, October 23

அன்பறிவு – விமர்சனம்

Loading

அன்பறிவு – விமர்சனம்

புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்து தோண்டி எடுத்த மாதிரி அரதப்பழசான ஒரு கதையில், அபத்தமான காடசியமைப்புகளுடன்,  அசட்டுத்தனமாக நாயகன் நடித்தால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் அன்பறிவு.

ஒரு வேடத்துக்கே ஒர்த் இல்லாத ஹிப்ஹாப் ஆதிக்கு இரட்டை வேடங்கள் கொடுத்து நாயகனாக்கியிருப்பது குருவி தலையில் பனங்காய் வைத்ததைப் போலிருக்கிறது.

கறுப்பு வெள்ளை பட காலத்திலிருந்து காலங்காலமாக வரும் இரட்டை வேட நாயகர்கள் கதையில் அடுத்து என்ன காட்சி வரப்போகிறது என்பதை சுலபமாக யூகிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஜனவரி மாதம் சபரிமலைக்கு போக மாலை போடுவது ஃபேஷனாகி விட்டதுபோல், விவசாயிகளிடம் கார்ப்பரேட் கம்பெனிகள் நிலத்தை வாங்க முனைவதையும், ஜாதி அரசியல் செய்யும் கட்சிக்காரர்களையும் காட்சிப்படுத்துவது தமிழ் சினிமாவில் ஃபேஷனாகி விட்டதால், பழைய மொந்தையில் புதிய கள் கொடுக்க நினைத்த அறிமுக இயக்குநர் அஸ்வின்ராம் ஊறுகாயாக கதையோட்டத்தில் இதையும் பயன் படுத்தியிருக்கிறார்.

மதுரையில் அம்மா மற்றும் தாத்தாவின் அரவணைப்பில் வளரும் அன்பு படு முரடனாக இருக்கிறார். வெளிநாட்டில் அப்பாவின் அதீத செல்லத்தில் வளரும் அறிவு அம்மா பாசத்துக்கு ஏங்குகிறார். அடுத்து என்ன ….ஆம்…அதேதான்… இங்கிருக்கும் அன்பு அங்கே போக, அங்கிருக்கும் அறிவு இங்கே வருகிறார்….அட.. அதற்குப் பிறகாவது கதையில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா என்று பார்த்தால் “ஒகுட்டி லேது”

காஷ்மீரா, ஷிவானி என்று இரண்டு கதாநாயகிகள் இருந்தும் ஒருவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகளே இல்லை. நெப்போலியன், சாய் குமார் சிறப்பாக நடித்திருக்கின்றனர். முரட்டு மீசையுடன் கிராமத்து பெரியவராக வரும் முன்னவரும், பிரமாதமான பிசினஸ் வெற்றியாளராக வரும் பின்னவரும் தத்தம் பாத்திரங்களுக்கு வலிமையாக நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
அம்மா வேடத்தில் வரும் ஆஷா சரத் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருப்பதால் நம் நினைவில் நிற்கிறார். தொடர்ந்து நல்ல குணசித்ர வேடங்களில் இவரை எதிர்பார்க்கலாம்.
எந்த சூழ்நிலை பாடல் என்றாலும் ஆதி பாணி டப்பாங்குத்து பாணியில் இருப்பது மிகப் பெரிய கொடுமை.

கிராமத்து வனப்பையும், வெளிநாட்டின் வளமையையும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அள்ளி வந்திருப்பது அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே….

தப்போ சரியோ….கரெக்டாக செய்வான் என்று படத்தில் வரும் ஒரு வசனத்துக்கு என்ன அர்த்தம் என்று அதை எழுதிய பொன்.பாத்திபனை நேரில் சந்தித்தால் கேட்க வேண்டும்.

சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது ஆதிக்கு அப்படி என்ன கோபமோ கைத்தறி நெசவை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லி சமீபத்தில்தான் சிவகுமாரின் சபதம் படத்தைக் கொ(கெ)டுத்தார். அதற்குள் அன்பறிவு படமா?

நல்ல வேளை இப்படம் ஓடிடியில் வெளியாகிறது. 200, 300 செலவு செய்து திரையரங்குக்கு படம் பார்க்க ரசிகர்கள் வந்தால் என்ன ஆவது…..