![]()

போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்
தகவல் தொழில் நுட்ப யுகத்தில் இன்றைய தலைமுறைக்கு தபால் நிலையம் குறித்தும், அது அந்தக்கால மக்கள் வாழ்வுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்திருந்தது என்பது குறித்தும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோயமுத்தூருக்கு அருகில் உள்ள போத்தனூர் என்ற சிறிய ஊரில் தொண்ணூறுகளில் இயங்கிய தபால் நிலையத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் போத்தனூர் தபால் நிலையம்.
நண்பர்களுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் தொடர்பான தொழில் ஒன்றைத் துவங்க வங்கியில் லோனுக்கு முயற்சி செய்யும் நாயகன் ப்ரவீணின் தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றுகிறார். தபால் நிலையத்தில் அன்றாடம் வரும் டெபாசிட் தொகை அதிகமாக இருந்தால் அதை தபால் நிலைய லாக்கரில் வைக்காமல் பாதுகாப்பாக அருகிலுள்ள ஸ்டேட் பாங்க் கிளையில் வைப்பது வழக்கம்.
ஒரு வெள்ளிக்கிழமை டெபாசிட்டாக வந்த ஏழு லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்த தவறிவிடுகிறார் கேஷியர். பணத்தை பாதுகாப்பாக தன் வீட்டில் வைத்திருந்துவிட்டு திங்கள் கிழமை திரும்பக் கொண்டு வரும் எண்ணத்துடன் அதைத் தன் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் போஸ்ட் மாஸ்டர். எதிர்பாராதவிதமாக வீட்டுக்குச் செல்லும் வழியில் பணத்தை தவற விட்டுவிடுகிறார்.
திங்கட் கிழமை காலை பணத்தைக் கட்ட வேண்டும் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற இக்கட்டான நிலையில் போஸ்ட் மாஸ்டர் இருக்க, அவரது மகன் ப்ரவீண் களத்தில் இறங்குகிறான்.
சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று லோனுக்காக அலைந்து கொண்டிருக்கும் பிரவீனுக்கு அப்பா தொலைத்த மிகப்பெரிய தொகையை 36 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்தால் தான் தன் குடும்பத்தை அவன் காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான சூழல்…
போஸ்ட் மாஸ்டர் தவறவிட்ட பணம் என்னவானது… ப்ரவீண் கம்ப்யூட்டர் பிசினஸ் ஆரம்பித்தாரா ….என்பதையெல்லாம் பரபரப்பான திரைக்கதை மூலம் விடை சொல்கிறார் அறிமுக இயக்குநர் ப்ரவீண். ஆம்…படத்தில் நாயகனாக நடித்த ப்ரவீண்தான் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இரண்டிலுமே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். படத்தின் கதை வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார். மட்டுமின்றி கலை இயக்குநர் பொறுப்பையும் இவரே ஏற்றிருக்கிறார்.
போஸ்ட் மாஸ்டராக வரும் ஜெகன் கிரிஷுக்கு உடல் மொழியும் வசன உச்சரிப்பும் அந்தப் பாத்திரத்துக்கு பொருந்திப் போவதால் நன்கு சோபிக்கிறார்.
நாயகி மிருதுளாவாக வரும் அஞ்சலி ராவ், சங்கு என்று நாயகன் செல்லமாக அழைக்கும் நண்பனாக வரும் வெங்கட் சுந்தர் ஆகியோரும் தங்கள் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
பீரியட் பிலிம் என்பதால் ரொம்பவும் மெனக்கெட்டு உழைத்த படக்குழுவை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தபால் நிலையத்துக்கு என்று தனியாக ஒரு லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோதுதான். தபால் நிலையத்தில் இந்த லோகோ வரையப்பட்டிருப்பது பல காட்சிகளில் வருவதைத் தவிர்த்திருக்கலாம். பில்டர் சார்மினார் சிகரட் புகைக்கும் காட்சியில் காட்டப்படுவது ப்ளைன் சார்மினார் பாக்கெட்டாக இருப்பதையும் கவனிக்கத் தவறியது ஏனோ?
சுகுமார் சுந்தரின் ஒளிப்பதிவும், தென்மாவின் இசையும் படத்துக்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.
ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியிருக்கும் போத்தனூர் தபால் நிலையம் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருவதால் தாராளமாகப் பார்த்து ரசிக்கலாம்.
