Tuesday, October 27

வாய்தா – விமர்சனம்

Loading

வாய்தா – விமர்சனம்

சாமானியர்களுக்கு சட்டமும் நீதியும் எப்படி கைக்கெட்டாத தூரத்தில் இருக்கிறது என்பதையும், வலியவர்களுக்கு அது எப்படி வளைந்து கொடுக்கிறது என்பதையும் அழகாகவும் ஆழமாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் படம்தான் வாய்தா.

சலவைத் தொழிலாளியான முதியவர் அப்புசாமி குடிசை ஒன்றில் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொடுக்கும் பணியைச் செய்து அன்றாடப் பிழைப்பை அவஸ்த்தையுடன் நகர்த்தி வருகிறார்.

அவரது மகன் விக்னேஷ் தந்தை செய்யும் தொழிலைத் தவிர்த்து தன் தலைமுறையிலிருந்தாவது வேறு பணிக்கு மாற வேண்டும் என்ற எண்ணத்தில் விசைத்தறிக்கூடம் ஒன்றில் நெசவாளராகப் பணி செய்கிறான். வேலை பார்த்துக்கொண்டே மேல்சாதிப் பெண் ஒருத்தியையும் காதிலிக்கிறான்.

ஒரு நாள் அப்புசாமி தன் பணியைத் துவக்க இஸ்திரி பெட்டியில் நெருப்புக் கங்குகள் போடும்போது பைக்கில் வந்த ஓர் இளைஞன் அவர் மீது மோதி விடுகிறான். நெருப்புக் காயங்கள் படுவதுடன் அவருக்கு எலும்பு முறிவும் ஏற்படுகிறது. பைக்கில் இடித்தவன் அதை அங்கேயே விட்டுவிட்டு ஓடிப்போய்விட, வண்டியை கொண்டுவரச் செய்து அதை அறையில் பூட்டி வைத்து பஞ்சாயத்து பேச ஆரம்பித்து விடுகிறார் உள்ளூர் குட்டி அரசியல்வாதி ஒருவர்.

பிரச்னையைப் பெரிதாக்காமல் வைத்தியச் செலவுக்கு மட்டும் பணம் வாங்கிக் கொள்ளலாம் என அப்புசாமி நினைக்க, விஷயம் அவர் கையை மீறிச் சென்று, போலீஸ், வழக்கு, கோர்ட், என விஸ்வரூபம் எடுத்து விடுகிறது.

நீதிமன்றத்துக்கு சென்றாலே வாய்தா மேல் வாய்தா வரும்தானே… தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதை முகத்தில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் அறிமுக இய்குகநர் சி.எஸ்.மகிவர்மன்.

பெரியவர் அப்புசாமியாக வரும் மு.ராமசாமியின் பரிதாபமான தோற்றமும், உடல் மொழியும், டயலாக் டெலிவரியும் அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டுகிறது. இந்த ஆண்டு மத்திய அரசின் சிறந்த நடிகருக்கான தேர்வில் போட்டியிடுபவர்களுக்கு மு.ராமசாமி கடுமையான டஃப் கொடுப்பார் என்பது திண்ணம். முத்துசாமியாக வரும் பிரசன்னா பாலசந்திரன் பாத்திரமும் கவனம் ஈர்க்கத் தவறவில்லை.

அப்பசாமியின் மகன் விக்னேஷாக வரும் புகழ் மகேந்திரன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். இவரது காதலியாக வரும் பெளலின் ஜெசிகா வயதுக்கேற்ற இளமைத் துள்ளலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களது காதல் காட்சிகளை இலக்கணம் மீறாத கவிதையாக வடித்திருக்கிறார் இயக்குநர் மகிவர்மன்.

கோர்ட்டிலிருந்து வரும்போது பல நாட்களாக பூட்டிக்கிடக்கும் தன் சலவைக் கடையை ஏக்கத்துடன் அப்புசாமி பார்ப்பது நம் மனதைப் பிசையும் காட்சி.

‘வாய்தா வாய்தா வாய்தா இது நேர்மைக்குப் பிடிச்ச நோய்தான்’  பாடலின் அர்த்தம் பொதிந்த வரிகள் மனதில் பதிய லோகேஷ்வரனின் இசை துணை நிற்கிறது.

எளிய மனிதர்களின் யதார்த்தமான வாழ்க்கையை பூச்சு இல்லாமல் அப்படியே பதிவு செய்திருக்கும் சேதுமுருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

தவறவிடாமல் பார்க்க வேண்டிய தரமான படம் வாய்தா