Tuesday, October 27

குலு குலு – விமர்சனம்

Loading

குலு குலு – விமர்சனம்

அமேசான் காடுகளில் பிறந்து, குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பேசும் ஒரு மொழியை தாய் மொழியாகக் கொண்ட சந்தானம் பதிமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து தமிழ்நாடு வருகிறார். நல்ல பழக்கம் என்பதா கெட்ட பழக்கம் என்பதா என்றே சொல்ல முடியாத மாதிரி ஒரு பழக்கம் இவரிடம் இருக்கிறது. அதாவது உதவி என்று யார் என்ன உதவி கேட்டாலும் செய்து, உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்யும் பழக்கம்தான் அது.
பசியால் தவித்த பிச்சைக்காரிக்கு சந்தானம் வாங்கித் தந்த உணவை திமிர் பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலையில் தட்டிவிட்டு வீணாக்கி விடுகிறார். “உனக்கு தைரியம் இருந்தால் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை அடி” என்று சொல்லி பிச்சைக்காரி சந்தானத்துக்கு கொம்பு சீவிவிடவே, பலர் பார்க்க இன்ஸ்பெக்டரை அறைகிறார் சந்தானம்.
கடத்தப்பட்ட தங்கள் நண்பனை மீட்பதற்கு இயலாதிருக்கும் நண்பர்கள் மூன்று பேர் கண்ணில் இன்ஸ்பெக்டரை சந்தானம் அறையும் காட்சி படவே, கடத்தப்பட்ட நண்பனை மீட்க சந்தானம்தான் சரியான ஆள் என அவர்கள் முடிவு செய்து சந்தானத்தை அணுக, அவரும் ஒத்துக்கொள்கிறார்.
இதற்கிடையில் இறந்துபோன தன் தந்தை உடலைப் பார்க்க பிரான்ஸ் தேசத்திலிருந்து வரும் மதில்டா என்ற இளம் பெண்ணைக் கொல்ல இங்கே உள்ள அவளது அண்ணன்கள் வில்லத்தனமான வேலைகளை செய்கின்றனர். இந்த பிரச்சனையும் சந்தானத்தின் பாதையில் குறுக்கிடுகிறது.
இளம் பெண் அண்ணன்களால் கொலையாகாமல் காப்பாற்றப்பட்டாளா
கடத்தப்பட்ட நண்பனை சந்தானம் மீட்டாரா என்பதை எல்லாம் சுவைபட சொல்லும் படம்தான் குலு குலு.
சந்தானத்துக்கு வைக்கப்பட்ட கூகுள் என்ற பெயர் மருவி குலு குலு என்றாகியிருப்பதாக ஒரு காட்சியில் சொல்லப்படுகிறது.
இதுவரை நகைச்சுவை நாயகனாகவே பார்த்து பழக்கப்பட்ட சந்தானத்தை குணசித்ர வேடத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். ஆயினும் சந்தானத்தின் வழக்கமான கலாய்க்கும் காமெடி இல்லாமல் மெலிதான நகைச்சுவை படம் முழுக்க விரவியிருப்பதை தாராளமாக ரசிக்கலாம்.
மேயாத மான் என்ற வித்தியாசமான படத்தில் அறிமுகமாகி, ஆடை என்ற புதுமையான படத்தைக் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாரின் அடுத்த மாறுபட்ட படைப்புதான் குலு குலு.
நமீதா கிருஷ்ணமூர்த்தி அதுல்யா சந்த்ரா என்று இரண்டு நாயகிகளும் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
மாறுபட்ட சந்தானத்தை ரசிக்க வரும்புகிறவர்கள் தாராளமாகப் பார்க்கலாம் இந்த குலு குலு.