Sunday, October 4

பொய்க்கால் குதிரை – விமர்சனம்

Loading

பொய்க்கால் குதிரை – விமர்சனம்

நடனப்புயல் என்றும் தென்னகத்து மைக்கேல் ஜாக்ஸன் என்றும் கொண்டாடப்படுவரை ஒரு கால் இல்லாதவராக படம் முழுவதும் வரும் வேடத்தில் நடிக்க வைப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பொய்க்கால் குதிரை படத்தை எழுதி இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமாருக்கு நிறையவே இருக்கிறது. சாதித்தும் காட்டிவிட்டார் மனிதர்.

விபத்தொன்றில் மனைவியையும் தன் ஒரு காலையும் இழந்த பிரபுதேவா தன் மகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்கிறார். விபத்து காரணமாக கிடைத்த நஷ்டஈடு தொகையை வைத்து மகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க பிரபு தேவா ஆசைப்பட, மகள் தன் படிப்பைவிட அப்பாவுக்கு ப்ராஸ்தடிக் லெக் பொருத்துவதே முக்கியம் எனக் கருதி, அதற்காக அப்பாவிடம் சண்டை போட்டு அந்த செயற்கை காலை பொருத்தச் செய்கிறார்.

இந்த சூழலில் திடீரென மகளுக்கு உடல் நலம் மோசமடைகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்தால்தான் மகள் பிழைப்பாள் என்று பிரபுதேவாவின் வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பிக்கிறது.

மகளின் உயிரைக்காக்க பணத்தை திரட்ட பிரபுதேவா என்ன செய்தார் அது என்ன மாதிரியான விளைவிகளை ஏற்படுத்தியது என்பதை பரபரப்பான திரைக்கதை மூலமும், திடீர் திருப்பம் ஏற்படுத்தும் காட்சிகளுடனும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படம்தான் பொய்க்கால் குதிரை.

நடனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தேள் படத்தில் குணசித்ர நடிகராக பரிமளித்த பிரபு தேவா, இந்தப் படத்தில் புதிய பரிணாமங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக மருத்துவமனையிலிருந்து மகள் காணாமல் போனதும், செய்வதறியாது தவித்து கோபத்தில் பொங்கும் காட்சியில் வெகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

செல்வந்தரின் மகள் வேடத்தில் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு குரலும் உடல் மொழியும் நன்கு ஒத்துழைப்பதால் அந்த பாத்திரத்தில் கம்பீரம் பளிச்சிடுகிறது.

படம் முழுவது ஒற்றைக் காலுடன் வந்தாலும் சண்டைக் காட்சிகள் உண்டு. படத்தின் ஆரம்பத்தில் வரும் சிங்கிலு… குத்தாட்ட பாடலிலும் அசத்தியிருக்கிறார் பிரபுதேவா.
பிரபு தேவாவின் மகள் மகிழாக வரும் சிறுமி ஆழியாவும் மனதில் நிற்கிறார்.

நகைச்சுவை வேடங்களிலேயே பார்த்துப் பழகிய ஜெகனுக்கு இதில் கொஞ்சம் மாறுபட்ட வேடம். ஆனால் பிரகாஷ் ராஜ், ஷ்யாம் போன்றவர்களின் பாத்திரம் ஏன் அவ்வளவு சுருங்கிப் போனது என்றுதான் புரியவில்லை.

ஆபரேஷனுக்கு பணஉதவி செய்வதாகச் சொல்லி க்ரவுட் பண்டிங் மூலம் யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றி விடமுடியாது. நோயாளி பெயரில் ஆஸ்பத்திரி மூலமாக வங்கிக்குச் செல்லும் வகையில்தான் க்ரவுட் பண்டிங் நடக்கும். இந்தக் காட்சிகளில் இயக்குநர் சரியாக கவனம் செலுத்தி படமாக்கியிருக்க வேண்டும்.

இமான் இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பல்லுவின் ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ் பாயிண்ட்

நல்ல கதையம்சம் உள்ள படத்தில் வித்தியாசமான பிரபுதேவாவை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.5 5