![]()

ஆதார் – திரைப்பட விமர்சனம்
குழந்தை பெற்றெடுத்த கையோடு காணாமல் போன மனைவியைத் தேடி அலையும் கணவனின் கதைதான் ஆதார்.
கட்டிடத் தொழிலாளியான கருணாஸ் தன் நிறைமாத கர்பிணி மனைவி ரித்விகாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார். கட்டுமானப் பொருள்களை திருடும் இனியாவை ஒரு முறை கையும் களவுவாகப் பிடிக்கிறார் கருணாஸ். ஆயினும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கருணாஸ் மனைவிக்கு உதவியாக இருக்க இனியா மருத்துவமனையில் தங்குகிறார்.
இந்த சூழலில் குழந்தை பெற்றெடுத்த ரித்விகா திடீரென காணமல் போகிறார்.
மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் கருணாஸ் புகார் செய்ய, புலன் விசாரணையில் இறங்குகிறது போலீஸ்.
உதவி செய்ய உடனிருந்த இனியா பிரேதமாகக் கிடக்கிறார். கள்ளக்காதலனுடன் ரித்விகா ஓடிவிட்டதாக போலீசார் கண்டுபிடித்து (?) சொல்ல, அதை நம்ப மறுத்த கருணாஸ் கதறித் துடிக்கிறார்.
உண்மையில் ரித்விகா என்ன ஆனார்…. இனியா இறந்தது எப்படி என்பதை சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை மூலம் சுவைபட சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார்.
கருணாஸின் பரிதாபமான தோற்றமும் அவரது உடல் மொழியும் ஏற்ற பாத்திரத்துக்கு வலு சேர்ப்பதால் சுலபத்தில் ஸ்கோர் செய்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்ல, குணசித்ர வேடங்களிலும் தன்னால் சோபிக்க முடியும் என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நரூபித்திருக்கிறார் கருணாஸ்.
ரித்விகா, இனியா இருவருக்கும் அதிக ஸ்கோப் இல்லை என்றாலும், கொடுத்த வேடத்தை குறைவின்றி கச்சிதமாக செயிதிருக்கின்றனர்.
காவல் துறை உயரதிகாரியாக வரும் உமா ரியாஸ் படத்தில் சிகரட்டை ஊதித் தள்ளுவதைப்போல் தான் ஏற்ற வேடத்தையும் ஊதித் தள்ளியிருக்கிறார். நேர்மையான போலீசாக வரும் அருண் பாண்டியன் பாத்திரமும் மனதில் ஒட்டிக் கொள்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான தேன் மிட்டாய் பாட்டு தேன் மிட்டாய்போல் இனிப்பதால் அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது.
படத்தின் பெரும் பகுதி இரவிலே நடப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறைந்த வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்து முத்திரை பதிக்கிறார் மகேஷ் முத்துசாமி.
ஆதிக்க சக்திகளின் அதிகார பலத்தில் எவ்வாறு அப்பாவி ஏழைகள் சிக்குண்டு தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதை யதார்த்தத்துக்கு நெருக்கமாக நின்று சொல்லும் நல்ல படம் ஆதார்.
மதிப்பெண் 3.5/ 5
