Tuesday, September 22

காந்தாரா – விமர்சனம்

Loading

காந்தாரா – விமர்சனம்

கே.ஜி.எஃப். படத்தைத் தயாரித்த ஹோம்பாலா பிலிம்ஸ் படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்லும் ரசிகர்களுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மேல் அமைந்து வித்தியாசமான திரை அனுபவத்தைத் தரும் படம் காந்தாரா என்று ஒரே வரியில் விமர்சித்து விடலாம்.

இந்தியா முழுக்க பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா கன்னடப் படத்தை டப்பிங் என்று சொல்ல முடியாத வகையில் மிக நேர்த்தியாக தரமான முறையில் தமிழ்ப்படுத்தி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கியிருப்பதும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகச் சொல்லலாம்.

நீண்ட காலத்துக்கு முன் ஆட்சி செய்த மன்னர் ஒருவர் மன நிம்மதியின்றி தவிக்கிறார். நிம்மதியைத் தேடிச் செல்லும் நெடிய பயணத்தில், மலைப்பகுதியில் இருக்கும் தெய்வத்தின் முன் மனம் லேசாகி  நிம்மதியை உணர்கிறார். இதன் காரணமாக மிகப்பெரிய நிலப்பரப்பை அந்த மலைவாழ் மக்களுக்கு தானமாகத் தருகிறார்.

நூறாண்டுகளுக்கு மேல் கடந்த விட்ட நிலையில் அந்த மன்னரின் இப்போதைய வாரிசுகள் தானமாக தரப்பட்ட நிலத்தை மீண்டும் பெற முயல்கின்றனர்.
நிலத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் வாரிசு ஒருவர் கோர்ட் வாசலிலேயே ரத்தம் கக்கி அகால மரணம் அடைக்கிறார்.

ஆயினும் ஆதிக்க சக்திகள், அப்பாவி மக்களிடம் உள்ள நிலத்தைக் கைப்பற்ற தொடர்ந்து முயல்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சொல்லும் கதையை வித்தியாசமான களத்தில், விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லும் படம்தான் காந்தாரா.

படத்தின் இயக்குநரான ரிஷப் ஷெட்டிதான் நாயகன் காடுபட்டு சிவா வேடம் ஏற்று அற்புதமாக நடித்திருக்கிறார். சாமியாடும்போது “ஹோாாாாாாாா… “என குரல் கொடுப்பது என்றென்றும் நம் காதில் ரீங்காகரமிட்டுக் கொண்டே இருக்கும்.

இயக்குநர் பொறுப்பையும் ஏற்றிருந்தாலும் நாயகன் வேடத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் படத்தின் மற்ற பாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்திருப்தற்காக ரிஷப் ஷெட்டியை தனியாக பாராட்டத்தான் வேண்டும்.

அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு கதை நடக்கும் அந்த மலைப்பகுதியில் நாம் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைத் தருகிறது. கர்நாடகாவின் புகழ் பெற்ற கம்பாளா என்ற எருது ரேஸூம் அதைப் படமாக்கிய விதமும் சபாஷ் போட வைக்கிறது.

அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. கதநாயகி இருந்தும் வலிந்து திணிக்கப்பட்ட டூயட் பாடல்கள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்.

எந்த வித பொறுப்பும் இல்லாமல் பீடி புகைத்துக்கொண்டு சாராயம் குடித்தக்கொண்டிருக்கும் நாயகன் சாமியாடியாக பரிமாணம் பெறுவது வலுவாக படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தில் நமக்குத் தெரிந்த ஒரே முகம் கிஷோர்தான். மற்ற முகங்கள் எதுவுமே நமக்குப் பரிச்சயமில்லை என்றாலும், துவக்கத்திலிருந்து இறுதிவரை படத்தில் நம்மை ஒன்ற வைப்பது மலைவாழ் மக்களின் கலாசாரத்தையும், ஆன்மிகத்தையும் அழகாக இணைத்து படத்தைக் கொண்டு சென்றதுதான்.

வித்தியாசமான திரை அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் காந்தாரா.

மதிப்பெண் 4/ 5