![]()

ஷூ – திரைப்பட விமர்சனம்
‘மாநாடு’, ‘கணம்’ ஆகியவற்றைத் தொடர்ந்து மற்றும் ஒரு டைம் மிஷின் கதை…
நாயகன் திலீபன் டைம் மிஷின் ஒன்றை உருவாக்குகிறார். அதைத் தன் ஷூவில் பொருத்திக் கொண்டு போகும்போது போலீசார் அவரை மடக்குகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஷூவை அடர்ந்த புதர் பகுதியில் ஒளிய வைக்கிறார்.
போலீசாரிடமிருந்து தப்ப முயலும்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவரது கழுத்தில் பாய்கிறது. போலீசாரே ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.
புதிரில் மறைத்து வைக்கப்பட்ட ஷூ ப்ரியா என்ற சிறுமியிடம் வந்து பின்னர் ‘தமாஷ் ரெளடி’ யோகிபாபுவிடம் வந்து சேர்கிறது.
அந்த ஷூவை அணிந்த அடுத்த நிமிடமே யோகிபாபுவின் வாழ்க்கையே மாறிவிடுகிறது. தமாஷ் ரெளடியாக இருந்த யோகி பாபு சீரீியஸ் ரெளடியாகிறார். அவரது செல்வாக்கு உயர்ந்து ஏராளமான பணமும் வந்து சேர்கிறது.
ப்ரியாவின் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. எப்போது குடித்துக் கொண்டிருப்பார். பள்ளியில் கிடைக்கும் மதிய உணவில் பாதியை ப்ரியா எடுத்து வந்து தந்தைக்கு ஊட்டிவிடும் அளவுக்கு ப்ரியா பொறுப்பான சிறுமி.
அப்படிப்பட்ட தன் மகளை குழந்தை கடத்தும் கும்பலுக்கு தந்தையே விற்று விடுகிறார். அந்த கும்பல் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடூர கும்பல்.
சிறுமி ப்ரியா அந்த கும்பலிடமிருந்து எப்படி தப்பித்து மற்ற சிறுமிகளையும் காப்பாற்றுகிறாள் எனபதுதான் ஷூ படத்தின் கதை.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் கல்யாண். காய் கறி வாங்கித் தரும் வேலை செய்த யோகிபாபு அந்த ஷூவை அணிந்ததுமே அவருக்கு கொலை செய்யும் வேலை வருவதுபோலவும், அந்த ஷூவே அவர் கழற்றியதும், மீண்டும் பழைய நிலைக்கு அவர் வருவதுபோலவும் உள்ள காட்சி அது டைம் மிஷின் பொருத்தப்பட்ட ஷீதானா இல்லை மந்திர சக்தி உள்ள ஷூவா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இது போன்ற அபத்தமான காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.
யோகிபாபுவுக்கு படம் முழுவது வருவதுபோன்ற பாத்திரம் என்றாலும், அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
அவருடன் வரும் கிங்ஸ்லீயும், கேபிஒய் பாலாவும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.
மொத்த படத்தையும் தாங்கிப் பிடிப்பது சிறுமி ப்ரியா வேடத்தில் நடித்திருக்கும் ப்ரியா கல்யாண்தான்.
இசை சாம் சி.எஸ்.என்று டைட்டிலில் மட்டுமே தெரிகிறது.
சிறுமிகள் கடத்தல், அவர்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது என்ற விஷயத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நல்லதொரு படத்தை கொடுத்திருக்கலாம். ஏனோ கோட்டை விட்டுவிட்டார் எழுதி இயக்கிய கல்யாண்.
இப்படி எல்லாம் படம் எடுத்தால் எப்படி திரையரங்குக்கு வந்து மக்கள் படம் பார்ப்பார்கள்?
ஓடிடியில் போட்டால்கூட பார்க்காமல் ஓடிவிடுவார்கள்.
மதிப்பெண் 1.5/ 5




