![]()

சர்தார் – திரை விமர்சனம்
திரைப்படம் என்பது பொழுது போக்கு மட்டுமல்ல… சிந்தனையைத் தூண்டும் நல்ல செய்திகளையும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் படத்தை உருவாக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனை முதலில் பாராட்ட வேண்டும்.
வங்கிக் கணக்கில் நடக்கும் மோசடிகளை ‘இரும்புத்திரை’ வழியாகவும், கல்வி கடைச் சரக்கானதை ‘ஹீரோ’ படத்தின் மூலமும் வெளிச்சம் போட்டுக் காட்டிய மித்ரன் ‘சர்தார்’ படத்தில் குடிதண்ணீர் மூலம் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடும் மாஃபியா கும்பல் குறித்த உரத்த சிந்தனையை முன்வைக்கிறார்.
பெட் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதால் வரும் நோய்களையும், அதன் பாதிப்புகளையும் படமாக்கியிருக்கும் காட்சிகளைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது.
சேதத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்ட சர்தாரின் மகன் விஜய் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி, தமிழ் நாட்டின் போலீஸ் முகமாக ஊடகங்களில் வர்ணிக்கப்படுகிறார். போராட்டம் ஒன்றின்போது அரசாங்கத்துக்கு சொந்தமான அதிமுக்கியமான கோப்பு ஒன்று காணாமல் போக, அதை களவாடியதாக கருதப்படும் லைலா மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.
லைலா கொல்லப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கும் விஜய் இது குறித்து புலன் விசாரணையில் இறங்க, தன் தந்தையைப் பற்றிய உண்மைகளும் அவருக்குத் தெரிய வருகின்றன. தேசத் துரோகி என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்ட தன் தந்தை உண்மையில் தேசத்துக்காகவும் மக்களின் நலனுக்காகவும் தன்னுயிரை துச்சமாக மதித்து உளவு பார்த்தவர் என்பதை புரிந்து கொள்கிறார்.
தந்தை மீது விழுந்த அவப் பெயரை தனயனால் போக்க முடிந்ததா… தண்ணீர் மாஃபியாக்களின் சாம்ராஜ்யத்தை அழிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம்தான் சர்தார்.
தந்தை சர்தார், மகன் இன்ஸ்பெக்டர் விஜய் என்று கார்த்தி இரட்டை வேடங்களில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார். தந்தை சர்தார் வேடத்தில் முதிர்ச்சியான நடிப்பு என்றால், மகன் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ‘வந்தியத் தேவ’ கலகலப்பு.
“ரெளடி பொய் சொல்லலாம்….ரெளடின்னே பொய் சொல்லக்கூடாது” என்று சொல்லிக் கொண்டே ஒரு ரெளடியை அடிக்கும்போது அரங்கமே அதிர்கிறது. பல்வேறு கெட் அப்களில் வருகிறார் கார்த்தி. அத்தனை கெட் அப்பும் அழகாகப் பொருந்துகிறது என்பதுதான் சிறப்பு. கார்த்தி நடித்த படங்களின் பட்டியலில் சர்தாருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு என்பதில் ஐயமில்லை.
வக்கீல் வேடத்தில் வரும் ராஷி கண்ணாவுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும், கொடுத்த வேடத்தை குறைவின்றி செய்திருக்கிறார்.
கம் பேக் கொடுத்திருக்கும் லைலாவுக்கு மிக முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் வேடம். கணமான வேடத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்க பலமாக இருக்கின்றன.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அக்கா தண்ணீரை எடுத்துக் குடிப்பதைப் பார்த்த கார்த்தி அதை தடுத்து, “தண்ணீரை காய வச்சு குடிங்க…” என்று சொல்கிறார். “தண்ணீரை காய்ச்சி குடிங்க…” என்று சொல்வதுதானே சரி.
படத்துக்கு வசனம் என்று ஐந்து பேர் பெயர் டைட்டிலில் வருகிறது. காய வைப்பது வேறு காய்ச்சுவது என்று ஒருவருக்கு கூடவா தெரியவில்லை.
தண்ணீரில் பிரச்னை இல்லை. அது அடைக்கப்டும் பிளாஸ்டிக் பாட்டிலில்தான் பிரச்னை என்று படம் சொல்கிறது. அப்படியானால் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுப்தைப் பார்க்கும் கார்த்தி, “தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். பாத்திரங்களில் வையுங்கள்…” என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
இரட்டை அர்த்த வசனம், குத்து பாட்டு போன்றவை இல்லாத வலுவான கதையம்சம் கொண்ட, விறுவிறுப்பான சர்தார் படம் நல்ல கருத்தையும் வலியுறுத்துவதால் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.
மதிப்பெண் 4/ 5




