![]()

நித்தம் ஒரு வானம் – திரைவிமர்சனம்
இந்த அளவுக்கு பாசிடிவ்வாக செய்தி சொல்லும் படம் எதையும் சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. துன்பத்தில் துவண்டு போகாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டு மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று சொல்லும் கருத்துள்ள படம்தான் நித்தம் ஒரு வானம்.
நாயகன் அசோக் செல்வன் எதிலும் பர்பெக்ட்டாக இருப்பவர். மற்றவர்களும் அப்படி பர்பெக்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். இந்த எதிர்பார்ப்பே அவருக்கு மற்றவர்களுடன் முரணை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற மருத்துவர் அபிராமியிடம் செல்கிறார் அசோக் செல்வன்.
அபிராமி உண்மைக் கதைகள் அடங்கிய இரண்டு டைரிகளை அசோக் செல்வனிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார்.
அதைப் படிக்கும் அசோக் செல்வன் இரண்டு டைரியிலும் இறுதிப் பக்கங்கள் இல்லாததால் அபிராமியிடம் உண்மைக்கதையின் முடிவு குறித்து கேட்கிறார். அதற்கு அபிராமி, முடிவைத் தெரிந்து கொள்ள நீ அவர்களை நேரில் சென்று சந்திக்க வேணடும் என்று கூறுகிறார்.
அந்த டைரியில் கதை வடிவில் இருக்கும் நிஜ மனிதர்களைத் தேடி கல்கத்தாவுக்கும், சண்டிகருக்கும் பயணம் போகிறார் அசோக் செல்வன். பேருந்து நிலையத்தில் அறிமுகமாகும் ரீது வர்மாவும் பயணத்தில் அவருடன் இணைந்து கொள்கிறார்.
பயணத்தின்போது தன் கதையை ரீது வர்மாவிடம் சொல்கிறார் அசோக் செல்வன். ரீது வர்மாவின் கதையும் அவருக்கு தெரிய வருகிறது.
சண்டிகரிலும், கல்கத்தாவிலும் அசோக் செல்வன் தேடிச் சென்ற நபர்களை சந்தித்தாரா. அவர்களிடமிருந்து கற்ற பாடம் என்ன என்பதுதான் படத்தின் கதை.
அசோக் செல்வனுக்கு நல்ல வலுவான பாத்திரம் இந்தப் படத்தில். படிக்கும் கதையின் பாத்திரமாக தன்னை அவர் நினைத்துக் கொள்வதுபோல் காட்சிகள் விரிவதால் வெவ்வேறு விதங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரும் தன் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆனால் தோற்றத்தில் பெரிய வித்தியாசத்தைக் காட்டாதது ஒன்றுதான் குறை.
ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று கதாநாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். மற்ற இருவரையம்விட அபர்ணா பால முரளியே மனதில் நிற்கிறார். காரணம் தந்தை அழகம் பெருமாளுடன் அவர் அடிக்கும் லூட்டிகள், அவ்வளவு கலகலப்பாக இருக்கிறது இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள்.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் விது அய்யணாவின் ஒளிப்பதிவுதான்.
பனி பெய்யும் காட்சிகளை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறது இவரது கேமரா. அசோக் செல்வனுடன் சேர்ந்து நாமே பயணப்பட்டதுபோல் இருக்கிறது.
கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.ஏ.கார்த்திக்.
அறிமுகமாகும் முதல் படத்திலேயே நல்ல மெசேஜ் சொல்ல நினைத்ததற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.
நம்பிக்கை நாற்றுக்களை விதைக்கும் நல்ல படம் நித்தம் ஒரு வானம்
மதிப்பெண் 3/ 5
