![]()

மிரள் திரைப்பட விமர்சனம்
அந்தக் காலத்தில் ஏவி.எம்., வாஹினி போன்ற நிறுவனங்கள் தயாரித்த படங்கள் என்றால் ஒரு எதிர்பார்ப்புடன் மக்கள் திரையரங்குக்கு வந்து திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள். அதுபோல் இன்று ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரியை சொல்லலாம் போலிருக்கு.
மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே என்று ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு வகையில் வெகுஜன ரசனைக்கு ஏற்றாற்போல் தயாரித்து, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரி. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் மிரள்.
படத்தின் துவக்கத்தில் பரத் மனைவி வாணி போஜன் மற்றும் மகனுன் நள்ளிரவில் காரில் பயணம் செய்கிறார். போன் அழைப்பு ஒன்றுக்கு பதிலளிக்க பரத் காரிலிருந்து இறங்கிச் செல்லும்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் வந்து அவரை அடித்து கொலை செய்கிறான். திடீரென தூக்கத்திலருந்த அலறியடித்தபடி விழித்தெழும் வாணி போஜன் இது கனவு என புரிந்து கொள்கிறார். படத்தின் துவக்கமே இப்படி சீட்டு நுனிக்கு பார்வையாளரை இழுத்து வரும் வகையில் ஆரம்பமாகிறது.
தொடர்ந்து வீட்டுக்குள் யாரோ நடமாடுவது போலிருக்கிறது…
வாணி போஜன் எதற்கோ பயப்படுகிறார்…
வாணி போஜன் தாயார் பரத்துக்கு போன் செய்து குலதெய்வம் கோவிலுக்கு வந்து பூஜை போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, குடும்பத்துடன் குல தெய்வம் கோவிலுக்குச் செல்கின்றனர்.
பரத்தின் நண்பர் ராஜ்குமாரும் குலதெய்வம் கோவிலுக்கு வருகிறார். குல தெய்வம் கோவிலில் படையல் போட்டதும் பரத், அவசரமாக சென்னை திரும்ப குடும்பத்துடன் புறபடுகிறார். பயணம் துவங்கியதும் வாணி போஜன் கனவில் கண்டதுபோல் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் பரத்தைத் தாக்கி கொல்ல முயற்சிக்கிறார்.
தொடர்ந்து நடக்கும் பயங்கரமான சம்பவங்கள், பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது. படத்தின் இறுதியில் பார்வையாளன் சற்றும் எதிர்பாராத வகையில் சஸ்பென்ஸ் உடைகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிரள் படத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் பரத். குழப்பம், பயம், துணிச்சல் என்று பலவித உணர்ச்சிகளையும் தன் நடிப்புத் திறனில் வலுவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் பரத்.
வாணி போஜனுக்கும் வெயிட்டான வேடம்தான். நிறைவாகச் செய்திருக்கிறார்.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல். முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்து வெற்றி பெறுகிறார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் ஒளிப்பதிவும் இசையும் மிகவும் முக்கியம். எஸ்.என்.பிரசாத்தின் இசையும் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
படத்தின் பெரும் பகுதி இரவிலேயே நடப்பதுபோல் காட்சிகள் இருந்தாலும், சுரேஷ் பாலாவின் கேமரா தெளிவாக குழப்பமின்றி அவற்றைப் படம் பிடித்திருக்கின்றன.
அதேபோல் எஸ்.என்.பிரசாத் பின்னணி இசையில் பிரமாதப் படுத்தியிருக்கிறார்.
ஆர்.கலைவாணனின் படத்தொகுப்பு கச்சிதமாக அமைந்திருப்பதுடன் படத்தை சற்றும் தொய்வின்றி துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பேருதவியாக இருக்கிறது.
அனைவரையும் கவரும் அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் மிரள்.
மதிப்பெண் 3.5 5
