![]()

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்
கார் டிரைவரான ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறரா்.
இதனால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஐஸ்வர்யாவின் தாயர். குடும்ப பாரத்தை ஏற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையைப் போலவே கார் டிரைவராக தன் பணியைத் துவக்குகிறார்.
செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய மூன்று பேர் கொண்ட கூலிப்படை ஒன்று செல்லும் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. இதனால் அந்த கொலைகார கும்பல் வாடகைக்காரை வரவழைக்கிறது. அந்த வாடகைக்காரை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டி வருகிறார்.
கொலைகார கும்பலைப் பற்றிய விவரம் தெரியாமலும், நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமலும் அவர்களை தன் காரில் ஏற்றிச் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காசுக்காக கொலை செய்யும் கூலிப்படையைப் போலீசும் மோப்பம் பிடித்து விடுகிறது. அவர்களை பிடிக்க போலீசும் முயற்சிக்க, செல்லும் வழியிலேயே ஐஸ்வர்யாவுக்கும் கொலைகார கும்பலைப் பற்றி தெரிய வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷை கத்தி முனையில் வைத்து கொலைகார கும்பல் பயணத்தைத் தொடர, போலீசாரும் இந்தக் காரை பின்தொடர்ந்து கொலைகார கும்பலை பிடிக்க முயற்சிக்க அட்டகாசமான ஆடுபுலி ஆட்டம் ஆரம்பமாகிறது.
கொலைகார கும்பல் திட்டமிட்டபடி அரசியல்வாதியை தீர்த்துக் கட்டியதா….ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை விறுவிறுப்பாகவும் சுவைபடவும் விவரிக்கும் படமே டிரைவர் ஜமுனா.
டிரைவர் ஜமுனாவாக மொத்த படத்தையும் ஒற்றை ஆளாகத் தூக்கி சுமக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…
அம்மாவுடன் சென்டிமெண்ட்காட்சிகளிலும், கொலைகார கும்பலிடமிருந்து தப்ப முயலும் அதிரடி காட்சிகளிலும் அருமையாக நடித்திருக்கிறார்.
வெயிட்டான கதாபாத்திரத்தையும் மிக இயல்பாக தன்னால் செய்ய முடியும் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கொலைகார கும்பலாக வருபவர்கள் உடல் மொழியும் உருவத் தோற்றமும் அவர்கள் ஏற்றிருக்கும் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கின்றன.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காருக்குள்ளேயும், நெடுஞ்சாலையிலும் நடக்கிறது என்றாலும் அவற்றை அலுப்பு ஏற்படாமல் விறுவிறுப்பாக கடந்து செல்லும் வகையில் படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் கிங்க்ஸ்லி.
இதற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவும் இயக்குநருக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கார் கவிழும் காட்சி ஆங்கிலப்படத்துக்கு இணையாக அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஜிப்ரான் இசை படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது.
ராமரின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்புக்கு வெகுவாக உதவியிருக்கிறது.
வித்தியாசமான கதைக்களம், மாறுபட்ட காட்சிகள், டிரைவர் ஜமுனாவை ஹை ஸ்பீடில் ஓட்ட வைக்கிறது.
மதிப்பெண் 3.5/ 5

