![]()

‘பொம்மை நாயகி’ – திரைப்பட விமர்சனம்
டீக்கடையி ல் பணியாற்றும் யோகிபாபு அன்பான மனைவி, அழகான மகள் பொம்மை நாயகியுடன் அன்றாடவாழ்க்கையை எளிமையாகக் கடக்கிறார்.
டீக்கடையை அதன் உரிமையளர் வேறு ஒருவருக்கு விற்க முடிவு செய்ய, யோகிபாபுவின் நலனில் அக்கறை கொண்ட நண்பர் எப்படியாவது பணம் புரட்டி டீக்கடையை உரிமையளரிடமிருந்து விலைக்கு வாங்கும்படி ஆலோசனை கூறுகிறார்.
யோகிபாபுவின் தந்தை ஜி.எம்.குமாருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மகன் அருள்தாஸ். இளைய தாரத்தின் மகன்தான் யோகிபாபு.
தன் தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாலேயே அருள்தாஸ் அவரை வெறுத்து ஒதுக்க, இரண்டாம் மனைவி மற்றும் யோகிபாபுவுடன் குடிசையில் வாழ்கிறார் ஜி.எம்.குமார்.
கோவில் திருவிழா நடக்கும்போது, பொம்மை நாயகி அதே ஊரைச் சேர்ந்த இரண்டு கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். ஊர்ப்பெரியவர்கள் என்ற போர்வையில் இருக்கும் சிறு மதியாளர்கள், யோகிபாபுவிடம் நடந்த கொடுமைக்கு சமரசம் பேச முயல்கின்றனர்.
முற்போக்கு சிந்தனை கொண்ட சமூக ஆர்வலர்கள் சிலர் யோகிபாபுவுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க முயல, காவலர்களும் கட்டை பஞ்சாயத்து செய்து விஷயத்தை மூடி மறைக்கவே பார்க்கின்றனர்.
தன் மகளுக்கு நீதி கிடைக்கவேண்டி யோகி பாபு நடத்திய போராட்டம் வென்றதா இல்லையா என்பதை விளக்கும் படமே பொம்மை நாாயகி.
ஆதிக்க சக்திகள் ஓர் எளிய மனிதனின் போராட்டத்தை எவ்வாறு நசுக்க முயற்சிக்கின்றன என்பதை துணிச்சலுடன் அப்பட்டமாக படம் பிடித்து காட்டியதற்காகவே இயக்குநர் ஷானுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். படத்தின் கதை, திரைக்கதை, வசனமும் இவரது கைவண்ணத்திலேயே மிளிர்கிறது.
இந்தப் படத்தின் சிறப்பம்சமே மிகைப்படுத்தப்பட சினிமாத்தனமாக காட்சிகள் எதுவுமின்றி நம் கண்முன் நடக்கும் சம்பவங்களை பார்ப்பதுபோல் படம் உருவாக்கப்பட்டிருப்பதுதான்.
மண்டேலா படத்துக்குப் பிறகு கணமான பாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து நம் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார் யோகி பாபு.
அவரது மகள் பொம்மை நாயகியாக வரும் சிறுமி ஸ்ரீமதியும் முதிர்ச்சியான நடிப்பால் முத்திரை பதிக்கிறார்.
யோகி பாபுவின் மனைவியாக வரும் சுபத்ராவும் அழுத்தமான நடிப்பால் இதயம் தொடுகிறார்.
இவர்கள் மட்டுமல்ல யோகி பாபுவின் அண்ணனாக வரும் அருள்தாஸ், அப்பாவாக வரும் ஜி.எம்.குமார், நீதிபதி எஸ.எஸ்.ஸ்டான்லி மற்றும் சின்ன சின்ன வேடங்களில் வருபவர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்து படத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.
கதை, திரைக்கதையை மீறி துறுத்திக்கொண்டு நிற்காத ஒளிப்பதிவை தந்திருக்கிறது அதிசயராஜின் கேமரா.
ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் சுந்தரமூர்த்தியின் இசையும் கச்சிதம்.
இறுதிக்காட்சியில் “யாரும்மா பாரதமாதா?… என்று யோகி பாபு தன் மகளிடம் கேட்க, அதற்கு அந்தக்குழந்தை “நான்தான்ப்பா பாரதமாதா…. “என்று பதில் சொல்வதில் புதைந்து கிடக்கும் அர்த்தம் அபாரம்.
சொந்தமாக டீக்கடை வைக்க அண்ணன் அருள்தாஸ் கொடுத்த பணத்தை அவரிடம் வைத்துவிட்டு பதில் பேசாமல் செல்லும் காட்சியில் கையாலாகத கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தொடங்கி, படம் முழுக்க பல காட்சிகளில் சோபிக்கிறார் யோகிபாபு.
உடன் நடிக்கும் கதாநாயகனையே கலாய்ப்பது, உருவ கேலி செய்வது என்ற நகைச்சுவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மண்டேலா பொமமை நாயகி நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களில் அவ்வப்போதாவது யோகி பாபு நடிக்க வேண்டும்.
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய நல்லதொரு திரைப்படம் பொம்மை நாயகி.
மதிப்பெண் 4.5 /5




