ஆரகன் விமர்சனம்
தவம் இருக்கும் முனிவர் ஒருவரை விஷப்பாம்பு ஒன்று கொத்த வருகையில், அவரது சீடன் முனிவரை காப்பாற்றுகிறார்.
உயிரைக் காப்பாற்றிய சீடனுக்கு என்ன வரம் வேண்டும் என முனிவர் கேட்க, அந்த சீடனோ எப்போதும் இளமையாக இருப்பதற்கு வரம் கேட்கிறான்.
அடுத்ததாக காலில் இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்ட முதிய பெண் ஒருத்தி (கலைச்செல்வி) அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
மூன்றாவதாக இளம் காதல் ஜோடியை பற்றிய கதை. காதலனாக மைக்கேல் தங்கதுரையும், காதலியாக கவிப்பிரியாவும் வருகின்றனர். பிரதான கதையாக நீள்கிறது இந்த காதல் ஜோடியின் கதை.
திருமணத்திற்கு பின் சொந்தமாக வியாபாரம் நடத்தி வசதியாக வாழ நினைக்கும் காதலன் மைக்கேல் தங்கதுரை சில லட்சங்களை கையில் வைத்திருக்கிறார்.
மேலும் ஓரிரு லட்சங்கள் தேவைப்படுகிறது. எனவே காதலி கவிப்பிரியா வேலைக்கு சென்று அதை சம்பாதிக்க முடிவு செய்கிறார். வனாந்தர மலைப்பகுதியில் தனித்திருக்கும் வீட்டில் வயதான பெண்மணியான ஸ்ரீரஞ்சனியை கவனித்துக் கொள்ளும் வேலை என்றும், அதற்கு மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் வரும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டு பணியில் சேர்கிறார் கவிப்ரியா.
ஸ்ரீரஞ்சனி கவிபிரியாவிடம் அன்பாக நடந்து கொள்கிறார், என்றாலும் அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பதை கவிப்பிரியாவால் உணர முடிகிறது.
இளமையை தக்க வைத்துக்கொள்ள வரம் கேட்ட சீடனுக்கும், காலில் விலங்குடன் அடைபட்டு கிடக்கும் கலைச்செல்வி க்கும், பிரதான கதையில் வரும் இந்த காதலர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் ‘ஆரகன்’ திரைப்படம்.
சரித்திர கால ராஜா கதையை போல் ஆரம்பித்து, முனிவரின் தவ வலிமை, மாந்திரீகம் என்றெல்லாம் மாறி மாறி அலைந்து சமகால காதலர்கள் கதைக்கு வந்து தலையை சுற்ற வைக்குது கதையும் திரைக்கதையும்.
முகம் பார்க்கும் கண்ணாடி வீட்டில் இருக்கக் கூடாது என்று ஸ்ரீரஞ்சனி சொல்வதற்கான காரணம் தெரியவரும் போது, அவிழும் மர்ம முடிச்சு ரசிக்க வைக்கிறது.
மற்றும் இதுபோல் எதிர்பாராமல் தாக்கும் ஓரிரு சஸ்பென்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்திருக்கின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மலைப் பிரதேசங்களை சூர்யா வைத்தியாவின் கேமரா மிக அழகாக படம் பிடித்திருக்கிறது. விவேக் ஜஸ்வந்த் இரட்டையர்களின் பின்னணி இசையில் உருவான பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
நாயகன் மைக்கேல் தங்கதுரை நாயகி கவிப்பிரியா ஸ்ரீரஞ்சனி ஆகியோர் திறம்பட நடித்திருந்தாலும் அது விழலுக்கு பாய்ச்சிய நீராகத்தான் பயனற்றுப் போயிருக்கிறது.
கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கவனம் செலுத்தி மெனக்கெட்டிருந்தால் ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாகி இருக்க வேண்டிய படம் ‘ஆரகன்’. என்ன காரணத்தாலோ இதை செய்யத் தவறி விட்டார் இயக்குனர்.