Thursday, October 8

ஃபைண்டர் _ விமர்சனம்

Loading

ஃபைண்டர் _ விமர்சனம்

குற்றமே செய்யாமல் – சந்தர்ப்ப சூழ்நிலையால் – சிறையில் வாடும் நபர்களை மீட்கும் கதை. சிறப்பானதொரு டிடெக்டிவ் த்ரில்லராக அளித்து இருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் .

பீட்டராக வரும் சார்லி மீனவர். மனைவி மற்றும் ஒரே மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு திடீரென பெரும் பண பிரச்சினை வருகிறது. அதை சமாளிக்க, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்று சிறைக்குச் செல்கிறார். அதற்காக பல லட்ச ரூபாய் பணம் தருவதாகவும், ஆறு மாதத்தில் விடுதலை பெற்றுத்த ருகிறோம் என (நிஜ) குற்றவாளி தரப்பு சொல்கிறது.

ஆனால் ஒரு லட்ச ரூபாய் தருவதோடு பின்வாங்கி விடுகிறது குற்றவாளி தரப்பு. அதோடு அவரை சிறையில் இருந்து வெளிக்கொணரவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். பதின் வயதில் இருக்கும் மகள், தந்தையை மீட்க போராடுகிறாள்.
அவருக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனம் உதவ வருகிறது.
சார்லி சிறை மீண்டாரா, உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா என்பதே கதை.

பீட்டராக சார்லி. அப்பாவி குடும்பத் தலைவனாக, தவறே செய்யாமல் சிறையில் வாழும் நபராக பரிதாபத்தை வரவழைக்கிறார்.
திரைப்படத்தை இயக்கியிருக்கிற வினோத் ராஜேந்திரன், பிரைவேட் டிடெக்டிவாக நடிக்கிறார். சிறப்பான இயல்பான நடிப்பு. அவரது உதவியாளராக வரும் தாரணியும் சிறப்பாக நடித்து உள்ளார்.

நிழல்கள் ரவி அரசு தரப்பு மூத்த வழக்கறிஞராக வந்து முத்திரை பதிக்கிறார். கம்பீர நடிப்பு.
தான் மட்டுமின்றி சார்லியையும் சிக்கலில் மாட்டி விடும் அப்பாவியாக வந்து அருமையாக நடித்து உள்ளார் சென்ராயன்.

சார்லியின் மகளாக பிரணா, வில்லனாக நாசர் என அனைத்து நடிகர்களுமே கவனத்தை கவர்கிறார்கள்.

சூர்ய பிரசாத்தின் இசை, பாபு ஆண்டனியின் ஒளிப்பதிவு,  தமிழ்க் குமரனின் எடிட்டிங் என அனைத்தும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

ஒவ்வொரு காட்சியுமே அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்து கின்றன. வெறும் துப்பறியும் கதை என்று மட்டும் இன்றி, சமுதாயத்தில் நடக்கும் கொடூரங்கள் ( பண மோசடி, மோசடிக்காக நடக்கும் கொலை, கொலைப்பழியை ஏற்று பணத்துக்குக்காக சிறை செல்லும் அப்பாவிகள்) குறித்தும் விரிவாகச் சொல்லி உறைய வைக்கிறார் இயக்குநர் வினோத் ராஜேந்திரன்.
மொத்தத்தில் ரசிக்க வைக்கும் சிறப்பான திரைப்படம்.