அமிகோ கேரேஜ் விமர்சனம்
‘பீப்பிள் புடக்சன் ஹவுஸ்’ முரளி ஶ்ரீனிவாசன், என்.வி. கிரியேசன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கி உள்ள படம், அமிகோ கேரேஜ்.
இதற்கு முன் எத்தனையோ கேங்ஸ்டர் படங்களைப் பார்த்திருந்தாலும், அதிக கேரேஜ் அவற்றிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது.
தவறான நபர்களின் நட்பு, ஓர் இளைஞனின் வாழ்க்கையை எந்த அளவுக்கு திசை மாற்றிவிடுகிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகன் ருத்ரன், தந்தை சொல் கேளாத மகன். போதை பழக்கம், தவறான நண்பர்கள் என ஊர் சுற்றுகிறார். பிறகு மனம் திருந்தி ஒரு வேலைக்குச் செல்கிறார்.
ஆனால் அவரது தவறான நட்புகள்- மதுப் பழக்கம் காரணமாக, தாதாவின் கையாள் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்ய எதிரி குழு திட்டமிட.. தன்னை தற்காத்துக்கொள்ள இவரும் தாதாவாக மாறுகிறார்.
நாயகன் ருத்ரனாக நடித்து உள்ளார் மாஸ்டர் மகேந்திரன். பெற்றோர் சொல்லை மதிக்காத இளைஞன் கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்து உள்ளார். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகளிலும் அக்கறை எடுத்து நடித்து உள்ளார்.
சந்தர்ப்ப சூழலால் கேங்கஸ்டராக மாறியதை நினைத்து அவர் கண்கலங்கும் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.
நாயகனின் ரவுடி குருவாக வருகிறார் ஜி.எம்.சுந்தர். கிண்டல், கேலி, அன்பு, பாசம் என அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடித்து உள்ளார். இறுதியில் அவரது வில்லன் முகமும் ரசிக்கவே வைக்கிறது.
நாயகியாக, ஆதிரா நடித்து உள்ளார். காதல் காட்சியிலும், காதலனின் ரவுடித்தனம் பிடிக்காமல் குமுறும் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.
அதே போல தனது கடந்தகால வாழ்க்கையைச் சொல்லும் போது கலங்கவைத்து விடுகிறார்.
விஜயகுமார் சோலை முத்துவின் ஒளிப்பதிவு, பாலமுரளி பாலுவின் இசை , ரூபன் – சி.எஸ். மகேந்திரன் ஆகியோரின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.
ஸ்ரீமான் பாலாஜினியின் கலை இயக்கம் சிறப்பு. குறிப்பாக அந்த அமிகோ கேரேஜ் செட்.
பெற்றோர் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய விதம் குறித்து பேசப்படும் வசனங்கள் மனதில் பதிந்து சிந்தனையைக் கிளறுகின்றன.
அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், முதல் படத்திலேயே கேங் ஸ்டார் கதையைச் சொல்லி ரசிக்க வைத்து இருக்கிறார்.